திங்கள், 14 செப்டம்பர், 2009

எந்தப் பகுதிக்கு பணம் அனுப்பினாலும் உடனடியாக சேரும்:அஞ்சல் துறை சேவையில் மற்றொரு புதுமை


சென்னை: ""அஞ்சல் துறையில் உடனடி பண பரிமாற்றம் செய்வதற்காக "யூரோ-ஜீரோ' திட்டத்தை வரும் அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தவுள்ளோம். அத்திட்டத்தின் படி, உலகின் எந்த பகுதிக்கு பணம் அனுப்பினாலும் அடுத்த ஒரு மணி நேரத்தில் "எலக்ட்ரானிக் டிரான்ஸ்பர்' மூலம் பணம் பெற்று கொள்ளலாம்,'' என்று அஞ்சல் துறையின் சரக்கு விமான சேவையை துவக்கிவைத்த மத்திய அமைச்சர் ராஜா பேசினார்.

அஞ்சல்துறையின் சரக்கு விமான சேவை துவக்க விழா சென்னை விமான நிலையத்தில் நேற்று நடந்தது. விழாவில், அஞ்சல் சேவை கழகத்தின் செயலாக்க உறுப்பினர் மஞ்சுளா பிரசர் வரவேற்றார்.அஞ்சல் துறையின் சரக்கு விமான சேவையை கொடியசைத்து துவக்கி வைத்து, சிறப்பு உறையை வெளியிட்ட மத்திய தகவல் மற்றும் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ராஜா பேசியதாவது:இந்தியாவில் மரபும், சேவையும் மாறாமல் இருப்பது ரயில்வே மற்றும் அஞ்சல் துறை.

ரயில்வே துறையாவது இந்தியாவில் சில இடங்களுக்கு சென்றடையவில்லை. ஆனால், ஆறு லட்சம் கிராமங்களை 1.55 லட்சம் தபால் நிலையங்கள் இணைத்துள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில் அஞ்சல் துறை புதிய பொலிவு பெற்றுள்ளது. இந்த துறை தபால்களை மட்டும் கொண்டு சேர்க்கும் துறை அல்ல. பெற்றோருக்கும் பிள்ளைக்கும் உள்ள பாசத்தை, முதலாளிக்கும் தொழிலாளிக்கும் உள்ள நம்பிக்கையை கொண்டு போய் சேர்க்கும் துறை.

அஞ்சல் துறை நவீனப்படுத்தாவிட்டால் எதிர்காலத்தில் சிதைந்து போகும் சூழல் ஏற்படும். இது சேவை துறை. இதில், லாபம் எதிர் பார்க்க கூடாது. வருவாயை கூட்டும் முயற்சி மேற்கொள் ளப்படாமல் இல்லை. வருவாயுடன் பொதுமக்கள் சேவை நோக்கத்தோடு இத்துறை செயல்பட வேண்டியுள்ளது.

தம்மாமில் நடந்த 'இஸ்லாம் ஓர் அறிமுகம்' நிகழ்ச்சி


தம்மாம் கலாச்சார மையம் சார்பாக இஸ்லாம் ஓர் அறிமுகம் நிகழ்ச்சி நடைபெற்றது.

கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந் நிகழ்ச்சியை பொறியாளர் ஷபியுல்லாஹ் கான் துவக்கி வைத்து வரவேற்புரை நிகழ்த்தினார்.

அதைத் தொடர்ந்து தம்மாம் கலாச்சார மையத்தின் மவ்லவி மன்ஸுர் மதனி இஸ்லாம் ஓர் அறிமுகம் என்ற தலைப்பில் சிற்றுரையாற்றினார்.

அதன் பிறகு மாற்று மதத்தினருக்கான கேள்வி-பதில் நிகழ்ச்சி நடந்தது. இஸ்லாம் குறித்த பிற மதத்தினரின் கேள்விக்கு பொறியாளர் ஜக்கரிய்யா மற்றும் மவ்லவி மன்ஸுர் மதனி ஆகியோர் பதிலளித்தனர்.

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார மையத்தின் மவ்லவி அப்துல் அஜீஸ் மதனி நன்றியுரையை வழங்கினார்.

டிசம்பர் முதல் சீனா-தைவான் செல்போன்களுக்கு தடை


பதினைந்து 15 இலக்க `ஐ.எம்.இ.ஐ.' எண் (IMEI number) இல்லாத செல்போன்களுக்கு வரும் டிசம்பர் மாதம் முதல் தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் சீனாவைச் சேர்ந்த செல்போன்களின் இயக்கம் பாதிக்கப்படும்.

அனைத்து செல்போன்களிலும் 15 இலக்க ஐ.எம்.இ.ஐ. என்ற எண் இடம் பெற்றிருக்கும். இந்த எண்ணை வைத்து இந்த செல்போன் உலகின் எந்த மூலையி்ல் பயன்படுத்தப்பட்டாலும் அதை அடையாளம் கண்டுவிட முடியும்.

ஆனால், கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படும்கடத்தல் செல்போன்களில் இந்த 15 இலக்க எண்கள் இருப்பதில்லை. பெரும்பாலும் சீனா மற்றும் தைவானில் தான் இப்படிப்பட்ட செல்போன்கள் தயார் செய்யப்பட்டு, உலகம் முழுவதும் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

ஏகப்பட்ட ஆப்ஷன்களைக் கொண்ட இந்த செல்போன்கள் மிகக் குறைந்த குறைந்த விலைக்குக் கிடைப்பதால் இந்தியாவிலும் இவை மிகப் பிரபலமாக விற்பனையாகி வருகின்றன.

இந்த விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும் கள்ளச் சந்தையில் இவை எளிதாகவே கிடைக்கின்றன.

இந் நிலையில் வரும் டிசம்பர் முதல் ஐ.எம்.இ.ஐ. எண்கள் இல்லாத செல்போன்களின் இணைப்பை ரத்து செய்யுமாறு வேண்டும் செல்போன் சேவை நிறுவனங்களுக்கு மத்திய தொலைத் தொடர்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதனால் சீன, தைவான் நாட்டு மலிவு விலை செல்போன்களை வைத்திருக்கும் லட்சக்கணக்கான மக்கள் அதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இவர்கள் இந்த செல்போன்களை மாற்ற வேண்டும் அல்லது இந்திய செல்போன் சேவை அளிக்கும் நிறுவனங்களின் சங்கத்தினர், பிரத்தியேகமாக தயாரித்து வைத்திருக்கும் சாப்ட்வேர் மூலமாக புதிய 15 இலக்க எண்களை பெற வேண்டும். இதற்காக நாடெங்கும் மையங்களை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதமே இந்த செல்போன்களின் இணைப்பை துண்டித்துவிடுமாறு செல்போன் சேவை நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்புத்துறை உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்த மலிவு விலை செல்போன்களை பெரும்பாலும் ஏழைகளே பயன்படுத்தி வருவதால், அத்தகைய செல்போன்களில் புதிய 15 இலக்க எண்களை, பிரத்தியேக சாப்ட்வேர் மூலம் பதிவு செய்து கொள்ள அனுமதிக்கலாம் என்று இந்திய செல்போன் சேவை அளிக்கும் நிறுவனங்களின் சங்கத்தினர் அரசிடம் கோரிக்கை வைத்தனர்.

இதை ஒப்புக்கொண்ட மத்திய அரசு நவம்பர் 30ம் தேதிக்குள் இந்த புதிய 15 இலக்க எண்களை செல்போன்களில் பதிவு செய்யுமாறு உத்தரவிட்டு கெடுவை நீடித்தது நினைவுகூறத்தக்கது.

காயல்பட்டினம் ஆறாம்பள்ளியில் முழு குர் ஆன் ஓதும் நிகழ்ச்சி

காயல்பட்டினம் ஆறாம் பள்ளிவாசலில் சனிக்கிழமை இரவு தராவீஹ் தொழுகையில் முழு குர்ஆனையும் ஓதி தமாம் செய்யப்பட்டது.

காயல்பட்டினம் நகர் மன்றத் தலைவர் வாவு செய்யித் அப்துல் ரஹ்மான், வாவு சாகுல் ஹமீத், கூபா ஷெய்க் சுலைமான், பொருளாளர் எஸ்.ஏ.கே. ஷேக் தாவூத், எம்.டி. ஜெய்னுத்தீன், வாவு மொகுதஸீம், என்.டி. அஹ்மத் ஸலாஹூத்தீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பஜர் தொழுகைக்குப்பின் முழு குர்ஆனையும் ஓதிய முஹம்மத் நூஹ் துஆ ஓதினார்.

பின்னர் அவர் அரபி பைத் பாடி நகர்வலமாக இல்லம் அழைத்துச் செல்லப்பட்டார்.

இதேபோல ஒரே இரவில் முழு குர்ஆன் ஓதி தமாம் செய்தல் கடந்த 1974-ல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் இப்தார் நிகழ்ச்சி

பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந் நிகழ்ச்சியை அக் கல்லூரியும், அமெரிக்க தூதரகமும் இணைந்து நடத்தின.

கல்லூரி தாளாளர் த.இ.செ. பத்ஹூர் ரப்பானி தலைமை வகித்தார்.

கல்லூரி முதல்வர் பேராசிரியர் ஹெச். செய்யது உதுமான், கல்லூரியின் ஆட்சிக் குழுத் தலைவர் பல்லாக் லெப்பை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக அமெரிக்க மையத்தின் கலாசார உறவு அலுவலர் நிக்நம்பா பங்கேற்று பேசினார்.

அமெரிக்கத் தூதரக ஊடகத் திட்ட முதுநிலை இயக்குநர் லாரன் கொலிட்டா, சாரதா கல்லூரித் தாளாளர் சங்கரானந்தா சுவாமி, அருள்தந்தை ஜமீல்ஸ் ஜேம்ஸ் ஆகியோர் பேசினர்.

நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் உபயத்துல்லா, அ. நிகமத்துல்லா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ஞாயிறு, 13 செப்டம்பர், 2009

நெல்லை பத்திரிக்கையாளர் மன்றம் ந‌ட‌த்திய‌ குழந்தை கடத்தல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி


நெல்லை பத்திரிக்கையாளர் மன்றம் சார்பில் குழந்தை கடத்தல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் உலக திரைப்பட திருவிழா ந‌டைபெற்ற‌து.

நெல்லை பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் இன்று பாளையங்கோட்டையில் நடைபெற்ற குழந்தை கடத்தல் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆஸ்ராகர்க் துவக்கி வைத்தார். பேரணி பாளை தூய சவேரியார் பேராலயம் வழியாக செந்தில்வேல் திரையரங்கம் வந்தடைந்தது இதில் எராள‌மான‌ ப‌ள்ளிக்குழ‌ந்தைக‌ள் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.

பின்னர் அங்கு நடைபெற்ற உலக திரைப்பட விழாவிற்கு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்புத்துரை இணை அமைச்சர் நெப்போலியன் தலைமையேற்றார் சுற்றுச் சூழல் அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் இராமசுப்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நெல்லை பத்திரிக்கையாளர் மன்ற தலைவர் எஸ்.ராமலிங்கம் வர‌வேற்றார். ஒருங்கினைப்பாளர் ஜி.பரமசிவன் விளக்கவுரையளித்தார். மாநகராட்சி மேயர் அ.லெ.சுப்பிரமணியன் சட்டமன்ற உறுப்பினர் என்.மாலைராஜா அருட்தந்தை அந்தோனி குரூஸ் அடிகளார், லேனாகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். பத்திரிக்கையாளர் மன்ற செயலாளர் அந்தோனி சேவியர் நன்றி கூறினார்.

விழாவில் யாதுமாகி திரைப்படக்களம் சார்பில் அமோர்க்கா மற்றும் ஈரான் குர்திஸ் மொழி திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

செல்வா,நெல்லை

'அரசியல் ரீதியாக எந்த முடிவும் எடுக்க முடியாத நிலையில் உள்ளேன்!' - விஜய்


சென்னை: இப்போதைக்கு அரசியல் ரீதியாக எந்த முடிவும் எடுக்க முடியாத நிலையில் நான் இருக்கிறன், என நடிகர் விஜய் இன்று கூறியுள்ளார்.

இன்று சென்னையில் தனது கல்யாண மண்டபகத்தில் அனைத்துப் பத்திரிகையாளர்களையும் சந்தித்தார் விஜய்.

இந்த சந்திப்பில் தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பதாகக் கூறியிருந்ததால் நூறுக்கும் மேற்பட்ட பத்திரிகை, இணையதள, தொலைக்காட்சி செய்தியாளர்கள் குழுமிவிட்டனர்.

இந்த சந்திப்பில் விஜய் கூறியதாவது:

கடந்த சில தினங்களாகவே எந்தப் பத்திரிகையைத் திறந்தாலும் எனது அரசியல் பிரவேசம் பற்றிய செய்திதான் முதலில் நிற்கிறது. உண்மையைச் சொன்னால் நான் அந்தளவுக்குப் பெரிய ஆள் கிடையாது.

ராகுல் காந்தியை டெல்லியில் நான் சந்தித்தது உண்மை. எனது திரைப்படங்கள், நான் செய்துவரும் மக்கள் பணிகளைப் பற்றிதான் நிறைய பேசினார். அரசியல் பற்றியும் பேசினோம். ஆனால், அதை இப்போது சொல்வது நாகரீகமாக இருக்காது.

அவரை சந்தித்தபோது அவர் என்னை நடத்திய விதம் எனக்கு மிக்க பிடித்திருந்தது. நானும், காங்கிரசும் இளைஞர்களை அணுகுவதில் ஒரே அணுகுமுறை தான் கொண்டுள்ளோம்.

இந்தியாவையே மாற்றிக் காட்ட வேண்டும் எனும் வேட்கையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நம்பிக்கை நட்சத்திரமான அவருடன் உரையாடியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. இது தமிழக மக்களுக்கும் என் ரசிகர்களுக்கும் கிடைத்த பெருமை(!?) என்பேன்.

எதிர்கால இளைஞர்களை அரவணைத்து ஒருங்கிணைத்துச் செல்லும் பொறுப்பு எனக்கிருக்கிறது. எனவே இப்போதைக்கு எந்த அரசியல் முடிவையும் நான் எடுக்கவில்லை, எடுக்க முடியவில்லை. இப்போதைக்கு மக்கள் இயக்கத்தைச் சிறப்பாகத் தொடரப் போகிறேன்.

அரசியல் குறித்து உடனடியாக எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாத நிலையில் நான் உள்ளேன் என்பதே உண்மை.

தமிழக மக்களுக்கும், உலகத் தமிழர்களுக்கும் நல்லது நடக்க வேண்டும். அதற்காக களத்தில் இறங்கிப் போராடுவேன். தொலைநோக்குப் பார்வையோடு ஒரு வளமான, வலிமையான அரசாங்கத்தை உருவாக்க எநதக் கட்சி முனைகிறதோ அவர்களோடு நான் கை கோர்ப்பது பற்றி முடிவு எடுப்பேன்.

வாழ்க தமிழ்.... வெல்க பாரதம் என்றார் விஜய் .

LinkWithin

Blog Widget by LinkWithin