திங்கள், 14 செப்டம்பர், 2009

டிசம்பர் முதல் சீனா-தைவான் செல்போன்களுக்கு தடை


பதினைந்து 15 இலக்க `ஐ.எம்.இ.ஐ.' எண் (IMEI number) இல்லாத செல்போன்களுக்கு வரும் டிசம்பர் மாதம் முதல் தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் சீனாவைச் சேர்ந்த செல்போன்களின் இயக்கம் பாதிக்கப்படும்.

அனைத்து செல்போன்களிலும் 15 இலக்க ஐ.எம்.இ.ஐ. என்ற எண் இடம் பெற்றிருக்கும். இந்த எண்ணை வைத்து இந்த செல்போன் உலகின் எந்த மூலையி்ல் பயன்படுத்தப்பட்டாலும் அதை அடையாளம் கண்டுவிட முடியும்.

ஆனால், கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படும்கடத்தல் செல்போன்களில் இந்த 15 இலக்க எண்கள் இருப்பதில்லை. பெரும்பாலும் சீனா மற்றும் தைவானில் தான் இப்படிப்பட்ட செல்போன்கள் தயார் செய்யப்பட்டு, உலகம் முழுவதும் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

ஏகப்பட்ட ஆப்ஷன்களைக் கொண்ட இந்த செல்போன்கள் மிகக் குறைந்த குறைந்த விலைக்குக் கிடைப்பதால் இந்தியாவிலும் இவை மிகப் பிரபலமாக விற்பனையாகி வருகின்றன.

இந்த விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும் கள்ளச் சந்தையில் இவை எளிதாகவே கிடைக்கின்றன.

இந் நிலையில் வரும் டிசம்பர் முதல் ஐ.எம்.இ.ஐ. எண்கள் இல்லாத செல்போன்களின் இணைப்பை ரத்து செய்யுமாறு வேண்டும் செல்போன் சேவை நிறுவனங்களுக்கு மத்திய தொலைத் தொடர்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதனால் சீன, தைவான் நாட்டு மலிவு விலை செல்போன்களை வைத்திருக்கும் லட்சக்கணக்கான மக்கள் அதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இவர்கள் இந்த செல்போன்களை மாற்ற வேண்டும் அல்லது இந்திய செல்போன் சேவை அளிக்கும் நிறுவனங்களின் சங்கத்தினர், பிரத்தியேகமாக தயாரித்து வைத்திருக்கும் சாப்ட்வேர் மூலமாக புதிய 15 இலக்க எண்களை பெற வேண்டும். இதற்காக நாடெங்கும் மையங்களை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதமே இந்த செல்போன்களின் இணைப்பை துண்டித்துவிடுமாறு செல்போன் சேவை நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்புத்துறை உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்த மலிவு விலை செல்போன்களை பெரும்பாலும் ஏழைகளே பயன்படுத்தி வருவதால், அத்தகைய செல்போன்களில் புதிய 15 இலக்க எண்களை, பிரத்தியேக சாப்ட்வேர் மூலம் பதிவு செய்து கொள்ள அனுமதிக்கலாம் என்று இந்திய செல்போன் சேவை அளிக்கும் நிறுவனங்களின் சங்கத்தினர் அரசிடம் கோரிக்கை வைத்தனர்.

இதை ஒப்புக்கொண்ட மத்திய அரசு நவம்பர் 30ம் தேதிக்குள் இந்த புதிய 15 இலக்க எண்களை செல்போன்களில் பதிவு செய்யுமாறு உத்தரவிட்டு கெடுவை நீடித்தது நினைவுகூறத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin