ஸ்ரீவை மக்களை பற்றியும் ஊர் நடப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்,உங்களுடைய கருத்துகளையும் பதிவு செய்யலாம்..
புதன், 27 ஜூலை, 2011
ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆய்வு
ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டை பொதுப்பணித்துறை அமைச்சர் கே.பி.ராமலிங்கம், பார்வையிட்டார். தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா உத்தரவுபடி தாமிரபரணி பாசன அணைக்கட்டுக்களை பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விவசாயிகளின் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
தாமிரபரணி ஆற்றுப் பாசனத்தில் கனடியன் அணைக்கட்டில் இருந்து கடைசி அணைக்கட்டான ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுப்பகுதி வரை உள்ள பாசன பகுதிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் கே.பி.ராமலிங்கம் பார்வையிட்டார்.
ஸ்ரீவைகுண்டம் வந்த அமைச்சருக்கு தாமிரபரணி பாசன வடிநில கோட்ட திட்டக்குழு தலைவர் உதயசூரியன், பேய்க்குளம் விவசாய சங்க பொருளாளர் குணசேகரன், ஒன்றிய அதிமுக. செயலாளர் ஆறுமுகநயினார், நகர செயலாளர் பால்துரை, பெருங்குளம் நகர செயலாளர் செல்லத்துரை ஆகியோர் வரவேற்றனர். பின்னர் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் உள்ள 18 மணல்வாரிகளிலும் உள்ள சர்ட்டர்கள் உடைந்து திறக்க முடியாமல் பயனற்றுப்போய் கிடப்பதை பார்வையிட்டார்.
ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுப் பகுதியில் ஆக்கிரமித்துள்ள அமலைச் செடிகளை அமைச்சர் பார்வையிட்டார். வடகால் வாய்க்காலை பார்வையிட்டபோது, வடகால் வாய்க்கால் தடுப்புச் சுவர்கள் இடிந்து கிடப்பதையும், மதகு பகுதியில் மணல் திட்டுக்கள் ஆக்கிரமித்திருப்பதையும் பார்வையிட்டார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம், இதையெல்லாம் பராமரிப்பது கிடையாதா என்ன இப்படி கிடக்கிறது, மீண்டும் 10 நாட்கள் கழித்து வருவேன் அப்போது அனைத்து குறைகளும் சரிசெய்யப்பட்டிருக்கவேண்டும் என்று அதிகாரிகளை எச்சரித்தார்.
வடகால் வாய்க்காலில் 20 எம்.ஜி.டி. திட்டத்தில் தண்ணீர் எடுக்கப்பட்டு இருவப்பபுரத்தில் இருந்து தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்பட்டு வந்தது. தற்போது அணைக்கட்டுக்கு மேல் பகுதியில் 28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு ராட்ஷச இயந்திரங்கள் மூலம் வடகால் வாய்க்கால் மூலம் எடுக்கப்பட்டு வந்த 20 எம்.ஜி.டி. தண்ணீரை எடுத்துச் செல்வதற்கான சோதனை ஓட்டத்தை நடத்தி வருகின்றனர்.
அந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், தாமிரபரணி அணைக்கட்டு, வடகால், தென்கால் பகுதியில் 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். ராட்ஷச இயந்திரங்கள் மூலம் தண்ணீர் எடுப்பதால், அணைக்கட்டுப்பகுதியில் தண்ணீர் வரத்து மிகவும் குறைவாக உள்ளது. எனவே அந்த திட்டத்தை கைவிட்டு வழக்கம் போல் வடகால் வாய்க்கால் மூலம் 20 எம்.ஜி.டி. தண்ணீர் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாமிரபரணி வடிநில கோட்ட திட்டக்குழு தலைவர் டி.உதயசூரியன் அமைச்சரிடம் கூறினார். அப்போது விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் அந்த கோரிக்கையை தமிழக முதல்வருக்கு அறிக்கையாக சமர்ப்பித்து, விவசாயிகள் துயர் துடைக்கவேண்டும் என்று அமைச்சரிடம் விவசாயிகள் கோரிக்கைவைத்தனர்.
அப்போது விவசாயிகளிடம், தொழிற்சாலைகளின் நலனை விட விவசாயிகளின் நலனையே பெரிதாக நினைப்பவர் ஜெயலலிதா, எனவே விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் ஜெயலலிதா ஆட்சியில் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் கூறினார்.
பொதுப்பணித்துறை அமைச்சர் கே.பி.ராமலி-ங்கம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, தமிழக முதல் அமைச்சர் என்னை அழைத்து, தாமிரபரணி பாசனத்தில் பல்வேறு குறைபாடுகள் உள்ளதாக, விவசாயிகளிடமிருந்து பல புகார்கள் வந்துள்ளது. எனவே தாமிரபரணி பாசன அணைக்கட்டு மற்றும் பாசன பகுதிகளை பார்வையிட்டு, அப்பகுதி விவசாயிகளின் குறைகளை கேட்டு வாருங்கள் என்று அனுப்பியுள்ளார்.
ஜெயலலிதா உத்தரவு படி நேற்று தாமிரபரணி பாசன கனடியன் அணைக்கட்டுப்பகுதியில் இருந்து கடைசி அணைக்கட்டான ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுப் பகுதிவரை பார்வையிட்டுள்ளேன். தாமிரபரணி பாசன விவசாயிகள் பாசனத்துக்கு முறையாக தண்ணீர் கிடைக்கவில்லை என்றும், பாசன கால்வாய்கள், குளங்களை தூர்வாரி மராமத்து செய்யவேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
கன்னடியன் அணைக்கட்டில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. எனவே இப்பகுதி விவசாயத்துக்கு தண்ணீர் விரைவில் வந்து சேரும். அணைக்கட்டில் பழுதாகியுள்ள மதகுகள், ஆற்றில் ஆக்கிரமித்துள்ள அமலைச்செடிகள், ஆற்றை தூர்வாருவது மற்றும் விவசாயிகள் கொடுத்துள்ள கோரிக்கை மனுக்கள் அனைத்தும் அறிக்கையாக தயாரிக்கப்பட்டு, தமிழக முதல்வரிடம் சமர்ப்பிக்கப்படும். தமிழக முதல்வர் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற உடனடியாக நடவடிக்கை எடுப்பார். இவ்வாறு பேட்டியில் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை தலைமை எஞ்சினியர் சம்பத்குமார், கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கால்ராஜ், செயற்பொறியாளர் காமராஜ், பிரிவு அலுவலர்கள் ரகுநாதன், வினோத்குமார், தாமிரபரணி பாசன வடிநில கோட்ட திட்டக்குழு தலைவர் டி.உதயசூரியன், தமிழ்நாடு விவசாய சங்க தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பெருமாள், ஒன்றிய செயலாளர் கணபதி, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் கந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நன்றி : தூத்துக்குடி வெப்சைட்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக