வெள்ளி, 12 ஜூன், 2009

மருத்துவ படிப்பில் சேர ஆர்வம் எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் 15 ஆயிரம் விற்பனை; கட்-ஆப் மார்க் உயருகிறது

தமிழ்நாட்டில் 15 அரசு மருத்துவக்கல்லூரிகளும், 4 தனியார் மருத்துவ கல்லூரிகளும் உள்ளன. அரசு மருத்துவ கல்லூரிகள் மூலம் எம்.பி.பி.எஸ். இடங்கள் 1483-ம் தனியார் மருத்துவ கல்லூரிகள் மூலம் 251-ம் கிடைக்கின்றன.

இது தவிர அரசு பல் மருத்துவ கல்லூரியில் 100 இடங்களும், தனியார் பல் மருத்துவ கல்லூரிகளில் 847 இடங்களும் உள்ளன. எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்பில் சேருவதற்கான விண்ணப்பம் கடந்த 10 நாட்களாக விற்கப்படுகிறது. விண்ணப்பம் பெறவும் பூர்த்தி செய்து வழங்கவும் 17-ந்தேதி கடைசி நாளாகும்.

எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கு மாணவ- மாணவிகள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். கடந்த ஆண்டு 12,732 விண்ணப் பங்கள் விற்கப்பட்டன. இந்த வருடம் நேற்று வரை 15 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்கப்பட்டுள்ளன. இன்னும் 1000 விண்ணப்பங்கள் வரை விற்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பங்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க 18 ஆயிரம் அச்சடிக்கப்பட்டு மையங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. முதல் கட்ட மருத்துவ கவுன்சிலிங் ஜூலை 6-ந்தேதி தொடங்கி 17-ந்தேதி வரை நடை பெறுகிறது. கவுன்சிலிங் நடக்கும் 11 நாட்களும் முழு காலி இடங்களும் அறிவிக்கப்படும்.

எம்.பி.பி.எஸ். அரசு ஒதுக்கீட்டு இடங்கள், தனியார் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், பல் மருத்துவ கல்லூரி அரசு இடங்கள், தனியார் மருத்துவ கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகிய அனைத்து இடங்களும் முதல் கட்ட கலந்தாய்வில் காட்டப்படும் என்று மருத்துவ கல்வி தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் ஷீலா கிரேஸ் ஜீவமணி தெரிவித்தார். அதனால் மாணவ- மாணவிகள் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் பற்றிய முழு விவரங்களை முதல் கட்ட கவுன்சிலிங்கில் அறிந்து கொள்ளலாம்.

இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் மாணவ- மாணவிகள் 200-க்கு 200 3 பாடங்களில் நிறைய பேர் எடுத்துள்ளனர். அதனால் எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கடந்த ஆண்டை விட கட்-ஆப் மார்க் உயர வாய்ப்பு உள்ளது. கடந்த வருடம் கட்-ஆப் மார்க் விவரம் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் அதை விட கூடுதலாக 0.25-ல் இருந்து 05 வரை கட்-ஆப் மார்க் உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 6 ஆயிரம் வந்து உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin