தென்மேற்குப் பருவமழை பொய்த்ததால் தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தின் பிரதான நீராதாரம் தாமிரபரணி ஆறுதான். இம் மாவட்டத்தில் தாமிரபரணி பாசனத்தில் 46,107 ஏக்கர் நன்செய் நிலங்கள் பிசானம், கார் என இருபோக சாகுபடி முறையில் இருந்து வருகின்றன.
தாமிரபரணி ஆற்றின் பாபநாசம், மணிமுத்தாறு ஆகிய இரு அணைகள் மூலம் இந்த நன்செய் நிலங்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி பாசனத்தில் நெற்பயிரே முழுமையாகப் பயிரிடப்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளாக போதுமான தண்ணீர் இல்லாத காரணத்தால், வாழையும் பல இடங்களில் பயிரிடப்பட்டு வருகிறது.
இந் நிலையில், நிகழாண்டில் தென்மேற்குப் பருவமழை பொய்த்ததால், மாவட்டத்தில் உள்ள 46,107 ஏக்கர் நிலங்களுக்கும் கார் சாகுபடிக்கு அனுமதி வழங்கி தண்ணீர் விடப்படவில்லை.
வாழைப்பயிர் உள்ள இடங்கள் தவிர, இந்த ஆண்டு சுமார் 30 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர் சாகுபடி செய்ய தயாராக இருந்த நிலையில், கார் சாகுபடிக்கு அனுமதி வழங்கப்படாததால், நெல் சாகுபடி நடைபெறவில்லை. இதன் காரணமாக விவசாயிகளுக்கு சுமார் ரூ.400 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்கிறார், தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி நதிநீர் பாதுகாப்புப் பேரவைத் தலைவர் எஸ். நயினார் குலசேகரன்.
இதேபோன்று, மாவட்டத்தில் அத்திமரப்பட்டி, காலாங்கரை, ஸ்ரீவைகுண்டம், சாயர்புரம் பகுதியில் சுமார் ஒரு கோடி வாழைகள் பயிரிடப்பட்டுள்ளன. இவற்றில் பல லட்சம் வாழைகள் தண்ணீர் இல்லாமல் கருகியுள்ளன. மேலும், ஏராளமான வாழைகள் கருகும் நிலையில் உள்ளன. இதன்மூலம் விவசாயிகளுக்கு சுமார் ரூ. 100 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.
எனவே, தூத்துக்குடி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து, அதற்கான
நிவாரணப் பணிகளைத் தொடங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
இதே கருத்தையே வலியுறுத்தினார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்டப் பொருளாளர் எஸ். சங்கரசுப்பு.
இது தொடர்பாக அரசுக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஏற்கனவே மனு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறிய சங்கரசுப்பு, மாவட்டத்தில் இந்த ஆண்டிற்கான நிலவரியை ரத்து செய்ய வேண்டும் என்றார்.
வடகிழக்குப் பருவமழையும் இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு இருக்காது என்ற தகவல்களால் விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், எட்டையபுரம், கோவில்பட்டி, கயத்தாறு,
புதூர் உள்ளிட்ட பகுதிகளில் மானாவாரி பயிர் சாகுபடி செய்ய விவசாயிகள் வடகிழக்குப் பருவமழையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக