செவ்வாய், 16 ஜூன், 2009

நவீனமயமாக்கல் செலவு-பயணிகளிடம் வசூலிக்க சென்னை, கொல்கத்தா விமான நிலையங்கள் முடிவு

விமான நிலைய நவீனமயமாக்கல் பணிகளுக்குத் தேவையான பணத்தை வசூலிக்க, பயணிகளிடம் தனியாக கட்டணம் வசூலிக்க சென்னை, கொல்கத்தா விமான நிலையங்கள் முடிவு செய்துள்ளன.

இதுகுறித்து சிவில் விமானப் போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், சென்னை, கொல்கத்தா விமான நிலையங்களை பயன்படுத்தும் பயணிகளிடம் வளர்ச்சிக் கட்டணம் வசூல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பொது முதலீட்டு வாரியத்திற்குப் பரிந்துரைக்கவுள்ளோம்.

இரு விமான நிலையங்களும் தற்போது ரூ. 5000 கோடி மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்படுகின்றன. முன்பு இது ரூ. 3750 கோடியாக திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது அது அதிகரித்து விட்டது.

இதையடுத்து கூடுதல் நிதியை பல்வேறு வழிகளில் திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ஒன்றுதான் பயணிகளிடம் வசூலிக்கப்படவுள்ள வளர்ச்சி கட்டணம்.

சென்னை, கொல்கத்தா தவிர திருவனந்தபுரம், திருச்சி , அகமதாபாத் உள்ளிட்ட விமான நிலையங்களிலும் இதுபோல வளர்ச்சிக் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளதாம்.

ஏற்கனவே டெல்லி விமான நிலையத்தில், ஒவ்வொரு சர்வதேச பயணியிடமிருந்தும் ரூ. 1300 மற்றும் உள்ளூர் பயணிகளிடம் ரூ. 200 வளர்ச்சிக் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இதே அளவில் சென்னை , கொல்கத்தா உள்ளிட்ட விமான நிலையங்களிலும் வசூலிக்கப்படும் எனத் தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin