திங்கள், 15 ஜூன், 2009

குற்றாலத்தில் ரோப் கார் இயக்க முடிவு: கலெக்டர் ஜெயராமன் தகவல்

நெல்லை மாவட்ட கலெக்டர் ஜெயராமன் நேற்று குற்றாலம் சென்றார். குற்றாலத்துக்கு தேவையான வளர்ச்சி பணிகள் குறித்து அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் கலெக்டர் ஜெயராமன் நிருபர்களிடம் கூறியதாவது:-

குற்றாலத்துக்கு கடந்த 2007-08-ம் ஆண்டு 30 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். 2008- 09-ல் 27 லட்சம் பேர் வந்துள்ளனர்.

சுற்றுலா பயணிகளின் அடிப்படை தேவைகள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். கார் பார்க்கிங் வசதி போதிய அளவில் இல்லை. இதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

குற்றாலம் வளர்ச்சி பணிகளுக்கு மத்திய அரசு ரூ.3 கோடியே 62 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது.

சுற்றுலா பயணிகளுக்கு பொழுது போக்கு அம்சங்கள் அதிகளவில் அமைத்து கொடுக்கப்படும். ஆண்டு முழுவதும் குற்றாலத்துக்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்ல தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

வெளிநாட்டு பயணிகள் வந்தால் அவர்கள் தங்குவதற்கு ஸ்டார் ஓட்டல்கள் குற்றாலத்தில் இல்லை. நவீன வசதிகளுடன் 150 அறைகள் இருந்தால் தான் ஸ்டார் ஓட்டல்கள் என்று கூற முடியும்.

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் குற்றாலத்தில் ரோப்கார் இயக்க ஆய்வு செய்யப்படுகிறது.

அருவிக்கரை பகுதிகளில் பெண்கள் உடைமாற்றம் செய்ய உள்ள அறைகள் வசதி குறைவாக இருக்கின்றன. இவற்றில் டைல்ஸ் பதித்து மெருகூட்டப்படும்.

சிற்றருவி நுழைவு வாயில் கேட் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். மெயின் அருவி, ஐந்தருவியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஐந்தருவி படகு குழாமை தூர்வாரி சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பயோகியாஸ் மூலமாக தெருவிளக்குகள் அமைக்கப்படும்.

சாலையோரம் குப்பை கொட்டுவதை தடுக் பிரதான சாலைகளில் மெட்டல் குப்பைத் தொட்டிகள் அமைக்கப்படும்.

குற்றாலம் இன்னும் 30 ஆண்டுகள் கழித்து எப்படி இருக்கும்? அப்போது சுற்றுலா பயணிகளுக்கு என்னென்ன வசதிகள் தேவைப்படும் என்பதை பராசக்தி மகளிர் கல்லூரி மாணவிகள் மூலம் சர்வே செய்யப்பட உள்ளது. அதன் அடிப்படையில் தேவையான வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

பேட்டியின்போது ஆர்.டி.ஓ. சண்முகநாதன், தாசில்தார் நம்மை ஆழ்வார் பெருமாள், டி.எஸ்.பி. மயில்வாகணன், பேரூ ராட்சி துணைத் தலைவர் ராமையா, நிர்வாக அதிகாரி பால சுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin