புதன், 9 செப்டம்பர், 2009

தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி: ராகுல் நம்பிக்கை


இளைஞர் காங்கிரûஸ பலப்படுத்தினால் தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்ற முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலர் ராகுல் காந்தி.

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மக்களவைத் தொகுதிகளில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்களுடன் பாளையங்கோட்டை சாராள் தக்கர் மேல்நிலைப் பள்ளியில் அவர் செவ்வாய்க்கிழமை கலந்துரையாடினார். அப்போது இந்த நம்பிக்கையை வெளியிட்டார்.

பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாத இந்தக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள், கூட்ட நிகழ்வு குறித்து பின்னர் நிருபர்களிடம் தெரிவித்தனர்.

ராகுல் காந்தி பேசியதாக அவர்கள் தெரிவித்ததாவது:

"இளைஞர் காங்கிரஸ் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெற உள்ளது. இத் தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். இதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் எந்தக் கோஷ்டியைச் சேர்ந்தவராகவும் இருக்கமாட்டார்.

இதனால் கட்சியில் கோஷ்டிப் பூசல் ஏற்பட இனி வாய்ப்பில்லை. அதிக உறுப்பினர்களை இளைஞர் காங்கிரஸில் சேர்ப்பவர்கள், நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

இளைஞர் காங்கிரஸின் உண்மையான தொண்டனாகவும், உண்மையாகவும் உழைத்தால், தேர்தலில் பணம் செலவழிக்கத் தேவையில்லை. உங்களை நம்பி தொண்டர்கள் வாக்களிப்பார்கள். கட்சிக்காக கடுமையாகப் பாடுபடுகிறவர்களை, கட்சி கண்டிப்பாக அங்கீகரிக்கும்.

இளைஞர் காங்கிரஸ் தேர்தல் முடிந்த பின்னர், கட்சித் தலைமையைத் தொண்டர்கள் எளிதாகத் தொடர்புகொள்ள முடியும்.

கிராமங்கள்தோறும் கிராமக் கமிட்டி அமைக்கப்படும். இக் கமிட்டியில் 5 பேர் நிர்வாகிகளாக இருப்பர். இவர்கள்தான் காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறவரையும், மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறவரையும் தேர்ந்தெடுப்பார்கள்.

தமிழகத்தில் இப்போது இருக்கும் அரசியல் நிலைமையை உடனடியாக நம்மால் மாற்ற முடியாது.

நாம் இப்போது அதிமுக, திமுக போல் இல்லாமல், இளைஞர் காங்கிரஸ் தேர்தலை ஜனநாயக முறைப்படி நடத்துகிறோம். இதனால் இளைஞர் காங்கிரஸ் கீழ்மட்டத்தில் இருந்து மேல்மட்டம்வரை பலமாக உருவாகும். இது எதிர்காலத்தில் நாம் ஆட்சியைப் பிடிக்க உதவும். இளைஞர் காங்கிரûஸ பலப்படுத்தினால், நாம் தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்ற முடியும்; தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி என்பது நிச்சயமாக சாத்தியம்' என்றார் ராகுல் காந்தி.

அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் அசோக் தன்வர், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.வீ. தங்கபாலு, அகில இந்திய காங்கிரஸ் செயலர் ஜிதேந்தர் சிங், திருநெல்வேலி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கே.டி. பென்னி ஆகியோர் இக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin