புதன், 9 செப்டம்பர், 2009

சுந்தரனார் பல்கலைக்கழக இளைஞர் நலத்துறையில் யோகா மற்றும் இயற்கை வைத்திய பாடங்கள் தொடக்கம்

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக இளைஞர் நலத்துறையின் யோகா மையம் சார்பில் இந்த கல்வியாண்டு முதல் யோகா மற்றும் இயற்கை வைத்தியம் தொடர்பான படிப்புகள் தொடங்கப்படுகின்றன.

இதுகுறித்து பல்கலைக்கழக பதிவாளர் மாணிக்கம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

யோகா மையம் சார்பில் யோகா மற்றும் இயற்கை வைத்தியம் தொடர்பான பகுதிநேர சான்றிதழ், பட்டயம், இளங்கலை, முதுகலை மற்றும் முதுகலை பட்டய வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. இதற்கான பட்டய மற்றும் பட்டச் சான்றுகளை பல்கலைக்கழக தொலைநெறிக் கல்வித்துறை வழங்கும்.

ஆறு மாத கால சான்றிதழ் வகுப்புகளில் சேருவோர் குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இதற்கான பயிற்சி கட்டணம் ரூ. 3,000. ஓராண்டு கால பட்டய படிப்பில் சேர குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதற்கான கட்டணம் ரூ. 4,000. மூன்று ஆண்டுகள் இளங்கலை வகுப்புகளில் சேர விரும்புவோர் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதற்கான பயிற்சிக் கட்டணம் ஆண்டுக்கு ரூ. 6,000.

ஓராண்டு முதுகலை பட்டய வகுப்பில் சேர விரும்புவோர் ஏதாவது ஒரு பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதற்கான ஆண்டுக் கட்டணம் ரூ. 5,000.

ஏதேனும் ஒரு பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் ஈராண்டு முதுகலை யோகா மற்றும் இயற்கை வைத்திய பட்ட வகுப்பில் சேரலாம். அதற்கான ஆண்டுக் கட்டணம் ரூ. 7,000. ஏதேனும் ஒரு பாடத்தில் இளங்கலை பட்டமும் பெற்று, யோகாவில் பட்டயமும் பெற்றவர்கள் ஓராண்டு பயிற்சி பெற்றால் போதும்.

இதற்கான வகுப்புகள் ஞாயிற்றுக்கிழமைகளில் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும்.

இந்த படிப்புகளில் சேர விரும்புவோர் ரூ. 100 செலுத்தி பல்கலைக்கழக இளைஞர் நலத்துறை அலுவலகத்தில் விண்ணப்பபடிவத்தை பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்களை பெற கடைசி நாள் இம் மாதம் 30 ஆம் தேதி. வயது வரம்பு கிடையாது.

மேலும், விவரம் அறிய விரும்புவோர் பல்கலைக்கழக இளைஞர் நலத்துறையைத் தொடர்பு கொள்ளலாம் என்றார் பதிவாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin