ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது முஸ்தஹபாகும். இது குறித்து அபூ ஹூரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள். "ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது, இரண்டு ரத் அத் ளுஹா தொழுவது மற்றும் தூங்கச் செல்லும் முன் வித்ரு தொழுவது என்ற மூன்று விஷயங்களை எனது நேசராகிய நபி (ஸல்) அவர்கள் எனக்கு வஸிய்யத் செய்தார்கள்." (ஸீஹஹூல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
அபூதர்தா (ரழி) அவர்கள் கூறியதாவது :"எனது நேசர் எனக்கு மூன்று விஷயங்களை உபதேசம் செய்தார்கள். நான் மரணிக்கும்வரை அதை விடவே மாட்டேன். ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது, ளுஹா தொழுவது இன்னும் வித்ரு தொழாதவரை நான் தூங்காமலிருப்பது." (ஸஹீஹ் முஸ்லிம்)
அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :"ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது வருடம் முழுவதும் நோற்பது போன்றாகும்" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸீஹஹூல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
நபி மொழியில் சுட்டிக்காட்டப்பட்ட மூன்று நாட்கள் என்பது ஒவ்வொரு மாதத்தின் பிறை 13, 14, 15வது நாட்களைக் குறிக்கும். அதனை அய்யாமுல் பீழ் என்று கூறப்படும். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் மாதத்தின் எந்த நாட்களையும் மூன்று நோன்புக்காக குறிப்பாக்காமல் நோற்றதற்கான ஆதாரங்களும் உள்ளன.
முஆதத்தல் அதவிய்யா(ரழி) அவர்கள் கூறினார்கள் : நான் அன்னை ஆயஷா (ரழி) அவர்களிடம், "நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பிருந்தார்களா?" என்று கேட்டேன். அன்னையவர்கள் "ஆம்!" என்றார்கள். "மாதத்தின் எந்தப் பகுதியில் நோற்றார்கள்?" எனக் கேட்டேன். "மாதத்தின் எந்தப் பகுதியில் நோற்பது என்பது பற்றி நபி (ஸல்) அவர்கள் முக்கியத்துவம் எடுத்துக் கொள்ளவில்லை" என பதிலளித்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக