திங்கள், 17 ஆகஸ்ட், 2009

ஸ்ரீவைகுண்டத்தில் ஓட்டுக்கு பணம் வாங்க வாக்காளர்கள் மறுப்பு: தா.பாண்டியன் பாராட்டு


ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் ஓட்டுக்கு பணம் வாங்க வாக்காளர்கள் மறுத்துள்ளனர்; அவர்களைப் பாராட்டுகிறேன் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் தா.பாண்டியன் கூறினார்.

ஸ்ரீவைகுண்டத்தில் ஞாயிற்றுக்கிழமை தீவிர பிரசாரம் செய்த தா.பாண்டியன், தேவர் சிலைக்கு மாலை அணிவித்து பிரசாரத்தை நிறைவு செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

இந்தியா சுதந்திரம் பெற்று 62 ஆண்டுகளாகிறது. சுதந்திரம் அடைந்தபோது இந்தியாவின் மொத்த வருமானம் 1090 கோடி ரூபாய். இப்போது 10 லட்சத்து 55 ஆயிரம் கோடியைத் தாண்டிவிட்டது.

இந்தியா தொழில்துறையில், விண்வெளி துறையில் முன்னேறி உள்ளது. தற்போது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் விடும் அளவுக்கு முன்னேறி உள்ளோம். ஆனால், ஸ்ரீவைகுண்டத்தில் மக்களுக்கு குடிநீர் கொடுக்க முடியவில்லை.

இத் தொகுதியில் பல இடங்களில் வாக்காளர்கள் ஓட்டுக்கு பணம் வாங்க மறுத்துள்ளனர். இந்தச் செயலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டுகிறது.

வாக்காளர்களாகிய நீங்கள் விலைபோக மாட்டீர்கள் என்பதை நாளை நடைபெறும் தேர்தலில் நிரூபித்து, தமிழகத்திற்கே ஸ்ரீவைகுண்டம் தொகுதி வழிகாட்டி என்ற பெருமையைத் தேடித் தரவேண்டும் என்றார்.

நிறைவு பிரசாரத்தில் மார்க்சீய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் கே.கனகராஜ், வட்டச் செயலர் கே.கந்தசாமி, ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி முன்னாள் தலைவர் உலகம்மாள், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் ஏ.மோகன்ராஜ், மாவட்ட துணைச் செயலர்கள் பி.கரும்பன், எஸ். அழகுமுத்துப்பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. எல்.அய்யலுசாமி, மாவட்டப் பொருளாளர் எம்.போத்தியடியான், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.உலகநாதன், எஸ்.குணசேகரன், இளைஞர் பெருமன்ற மாவட்டத் தலைவர் டி.முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin