தூத்துக்குடி மாவட்டத்தில் ஆத்தூர், ஆறுமுகநேரி பகுதியில் சூறாவளி காற்று வீசியதால் பல்லாயிரக்கணக்கான வாழைகள் சரிந்து சேதமடைந்தன. கடையனோடை, தென்திருப்பேரை பகுதியில் அதிகபட்சமாக 2 லட்சம் வாழைகள் சேதமடைந்தன.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பலத்த காற்று வீசி வருகிறது. இந்த காற்று சூறாவளியாக மாறியது. நேற்று மாலை வரை நீடித்த சூறாவளி காற்றால் பயிரிட்டுள்ள வாழைகள் சேதமடைந்ததால் விவசாயிகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தென் பகுதியில் அதிக அளவில் வாழை பயிரிடும் பணி ஆத்தூர், ஆறுமுகநேரி, கீரனூர், தலைவன்வடலி, மேல ஆத்தூர், சுகந்தலை, மரந்தலை, சேர்ந்த பூமங்கலம், குரும்பூர் ஆகிய கிராமங்களில் பெருமளவில் விவசாயிகள் வாழையை நம்பி வருகின்றனர்.
நேற்று வீசிய சூறாவளிக் காற்றினால் தென்திருப்பேரை, கடையனோடை ஆகிய கிராமங்களில் வாழைகள் அதிகளவில் சேதமடைந்துள்ளன. 500 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட சுமார் 5லட்சம் வாழைகளில் சுமார் 2.5 லட்சம் வாழைகள் சேதமடைந்துள்ளது.
சேதமடைந்த வாழைகளில் தார்கள் குழை தள்ளிய நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக