சனி, 13 ஜூன், 2009

இந்த நூற்றாண்டில் இந்தியர்களின் கடைசி கிரகணம் - ஜூலை 22ம் தேதி


இந்த நூற்றாண்டில் இந்தியாவில் நிகழும் கடைசி சூரிய கிரகணம் அடுத்த மாதம் 22ம் தேதி நடக்கிறது. இதற்கு அடுத்து இந்தியாவில் 2114ம் ஆண்டு ஜூன் 3ல் தான் தெரியும்.

சூரியனுக்கும், பூமிக்கும் நடுவில் வரும் சந்திரன், சூரியனை மறைக்கும் சில நிமிடங்களை தான் நாம் சூரிய கிரகணம் என்கிறோம். இந்நிலையில் இந்தியாவில் சூரிய கிரகணம் வரும் ஜூலை 22ல் தெரிய இருக்கிறது.

குஜராத்தின் காம்பே வளைகுடா பகுதியில் காலை 6.23 மணிக்கு துவங்கும் இந்த சூரிய கிரகணம் சுமார் ஒரு மணி நேரம் 7 நிமிடங்கள் நீடித்து 7.30மணிக்கு விலகும்.

முழு சூரிய கிரகணம் 6.26 மணிக்கு துவங்கி 6.30 வரை நான்கு நிமிடங்கள் மட்டுமே. இந்த சமயத்தில் சூரியன் முற்றிலுமாக தெரியாது.

இந்தியாவில் இந்த நூற்றாண்டில் தெரியும் கடைசி சூர்ய கிரகணம் இது தான் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதன்பின்னர் பல சூரியன் கிரகணங்கள் வந்தாலும் அதை இந்தியாவில் பார்க்க முடியாது. இந்தியாவில் அடுத்த சூரிய கிரகணம் 2114ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி தான் தெரியும். அதாவது இன்னும் சுமார் 105 ஆண்டுகளுக்கு பின் தான் தெரியும்.

இது குறித்து பிர்லா கோளரங்க ஆராய்ச்சி துறை இயக்குனர் தேபி பிரசாத் துவாரி கூறுகையில், இம்முறை சூரிய கிரகணம் நீண்ட நேரம் நடக்கிறது. முழு சூரிய கிரகணம் தெரியும் அனைத்து பகுதிகளிலும் மக்கள் வைர மோதிரம் எனப்படும் அரிய சூரிய கிரகண நிகழ்வை காணலாம்.

சந்திரன், சூரியனை முழுமையாக மறைப்பதற்கு சற்று முன் சூரியனின் ஒரு பக்கத்தில் மட்டும் பெரிய ஒளிகீற்று ஒன்றும், சூரியனின் சுற்றுவட்டமும் பார்ப்பதற்கு வைர மோதிரம் போல் தெரியும்.

இந்த கிரகணத்தை குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் மக்கள் தான் முதன் முதலாக பார்க்க முடியும். மும்பை மக்கள் 90 சதவீத கிரகணத்தையும், டெல்லி மக்கள் 85 சதவீத கிரகணத்தையும் காணலாம். கொல்கத்தா உள்ளிட்ட தெற்கு வங்காள பகுதி மக்கள் சுமார் 91 சதவீத கிரகணத்தை காண முடியும்.

இந்த நகரங்களை தவிர்த்து வதோதரா, இந்தூர், உஜ்ஜயின், போபால், பாட்னா, டார்ஜலிங், இடாநகர் ஆகிய இடங்களிலும் சூரிய கிரகணம் தெரியும்.

சூரிய கிரகணத்தின் போது தொடர்ந்து 6 முதல் 8 வினாடிகள் சூரியனை வெறுங்கண்ணால் பார்த்தால் உங்களது கண்களுக்கு பாதிப்பு உண்டாகும். இதற்கு முன்னதாக 1995லும், 1999லும் இந்தியாவில் சூரிய கிரகணம் தெரிந்தது. 1999லும் சூரிய அஸ்தமன நேரத்தில் கிரகணம் ஏற்பட்டதால் தெரியவில்லை என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin