திங்கள், 3 ஆகஸ்ட், 2009

யுஏஇ - வெளியேறுவோரில் தமிழர்களே அதிகம்

உரிய ஆவணங்கள் இல்லாமல் ஐக்கிய அரபு எமிரேட்டுக்குச் சென்று அங்கிருந்து வெளியேறுவோரில் தமிழர்கள் முதலிடத்தில் உள்ளனர்.

உரிய ஆவணங்கள், முறையான விசா இல்லாமல் துபாய் உள்ளிட்ட யுஏஇ நாட்டின் பல பகுதிகளுக்கும் செல்லும் தமிழர்கள் அங்கிருந்து எமர்ஜென்சி சர்டிபிகேட் பெற்றுக் கொண்டு நாட்டை விட்டு வெளியேறுவது அதிகரித்துள்ளது.

இந்த சர்டிபிகேட் இருந்தால் உரிய ஆவணங்கள் இல்லாதவர்கள் நாடு திரும்ப முடியும்.

இந்த சர்டிபிகேட் கோரி விண்ணப்பிப்போர் எண்ணிக்கை கடந்த 7 மாதத்தில் 3 மடங்கு அதிகரித்துள்ளதாக துபாயில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த 812 பேர் எமெர்ஜென்சி சர்டிபிகேட் மூலம் நாடு திரும்பியிருந்தனர். ஆனால், இந்த ஆண்டு ஜூலை மாதத்துக்குள் 2,525 பேர் இந்த சர்டிபிகேட் மூலம் நாடு திரும்பியுள்ளனர்.

தமிழ்நாட்டவரைத் தொடர்ந்து ஆந்திரா, கேரளத்தைச் சேர்ந்தவர்கள் இந்த சான்றிதழை அதிகளவில் பயன்படுத்தியுள்ளனர்.

ஐக்கிய அரபு எமரேட்சி்ல் சிதம்பரம், தஞ்சை, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே அதிக அளவி்ல் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் சர்வதேச பொருளாதார மந்த நிலையால் அங்கு கட்டுமானப் பணிகள் தேக்கமடைந்துள்ளன.

இதனால் இந்தப் பணியில் சேர அந் நாட்டுக்குச் செல்வோர் உரிய வேலை கிடைக்காமல் நாடு திரும்ப வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். எமர்ஜென்சி சர்டிபிகேட்டை பயன்படுத்தி நாடு திரும்பியோரில் இந்த கட்டுமானப் பணியாளர்களே அதிகம்.

யுஏஇ நாட்டில் 15 லட்சம் இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நாட்டில் வேலையை இழந்த அல்லது வேலை கிடைக்காமல் பாதிக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது பாஸ்போர்ட்டையே ரூ. 30,000க்கு விற்றுவிடும் நிலையும் உள்ளது.

இவர்களைக் குறி வைத்து செயல்படும் கர்நாடகம்-கேரளத்தின் காசர்கோட்டைச் சேர்ந்த மாபியா-விபச்சார கும்பல் பாஸ்போர்ட்டை விலைக்கு வாங்கிக் கொண்டு தமிழர்களை ஏமாற்றி வருகிறது.

பி்ன்னர் இந்தக் கும்பல் பாஸ்போர்ட்டை மோசடி செய்து தங்களது மற்றவர்களை துபாய்க்குள் வரச் செய்கிறது என்கின்றனர் துபாய் இந்திய தூதரக அதிகாரிகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin