திங்கள், 3 ஆகஸ்ட், 2009

அனிதா ராதாகிருஷ்ணனுக்கு திருச்செந்தூர் தொகுதியில் வரவேற்பு



அதிமுகவில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட அனிதா ராதாகிருஷ்ணனுக்கு திருச்செந்தூர் தொகுதி ஆதரவாளர்கள் மற்றும் மக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது

முக்காணியில் திமுக செயலர்கள் நட்டார், பி.எஸ்.முருகேசன் தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது.

முக்காணி ரவுண்டானாவில் நகர அதிமுகவினர் கட்சிப் பொருளாளர் வேம்பு தலைமையில் அக் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.

அவர்களை மாவட்ட ஊராட்சி உறுப்பினர் அ. வித்யாசாகர், அங்கமங்கலம் ஊராட்சித் தலைவர் ஜான், குரும்பூர் அருளானந்தபுரம் திமுக கிளை செயலர் இசக்கிமுத்து உள்ளிட்டோர் வரவேற்றனர். ஆத்தூரில் திமுக நகரச் செயலர் சுந்தர்ராஜ், காமராஜ் நற்பணி மன்றத் தலைவர் ப. ஜெயக்குமார், திமுக முன்னாள் செயலர் சீனிவாசப்பாண்டியன், புன்னக்காயல் கிளைச் செயலர் ரவீந்திரன், விவசாய சங்க முன்னாள் தலைவர்கள் எஸ்.ஏ. செல்வராஜ், ராஜேந்திரன் உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர்.

அப்போது பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டபின், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து முதல் முறையாக தொகுதிக்கு வந்துள்ளேன். மக்கள் பாதுகாப்புடன் இருக்கிறேன். பாச உணர்வுடன் என்னை அரவனைத்து வரவேற்றுள்ளீர்கள். என்னுடைய பணி என்றும்போல் தொடரும்.

சென்னையில் வருகிற 10ம் தேதி, தமிழக முதல்வர் கருணாநிதியை சந்தித்து என்னுடைய ஆதரவாளர்களுடன் திமுகவில் முறைப்படி இணைய உள்ளேன். அதன்பின், தளபதி மு.க.ஸ்டாலின், தென் மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி ஆகியோர் அறிவுரையின்படி திருச்செந்தூர் தொகுதியை திமுகவின் கோட்டையாக மாற்றுவேன் என்றார் அனிதா ராதாகிருஷ்ணன்.

தெற்கு ஆத்தூரில் வெற்றிலை விவசாயிகள் சங்கத் தலைவர் சதீஷ்குமார், ஆறுமுகனேரியில் திமுக நகரச் செயலர் கா.மு. சுரேஷ், பொருளாளர் அ. கல்யாணசுந்தரம், பேயன்விளையில் காங்கிரஸ் பிரமுகர் அழகேசன், காயல்பட்டினத்தில் திமுக நகரச் செயலர் மு.த. ஜெய்னுத்தீன் ஆகியோர் தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது.

நரசன்விளை, கீரனூர், தலைவன்வடலி உள்ளிட்ட இடங்களிலும் அவருக்கு வரவேற்பளிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin