சனி, 15 ஆகஸ்ட், 2009

ஸ்ரீவை இடைத்தேர்தல் தயார் நிலையில் வாக்கு இயந்திரங்கள்


தூத்துக்குடி மாவட்டம்,ஸ்ரீவைகுண்டம் பேரவை இடைத்தேர்தலை முன்னிட்டு, மின்னணு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னங்கள் அடங்கிய வாக்குச் சீட்டுகள் மத்திய தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் நேற்று பொருத்தப்பட்டு, மின்னணு இயந்திரங்கள் அனைத்தும் வாக்குப் பதிவுக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் இம்மாதம் 18ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மொத்தமுள்ள 172 வாக்குச் சாவடிகளுக்கு, எந்தெந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை அனுப்புவது என்பது குறித்து கணினி மூலம் தேர்வு செய்து பட்டியல் தயாரிக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் பிரகாஷ் தலைமையில், மத்திய தேர்தல் பார்வையாளர்களான ரங்கசாமி, சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் இந்த தேர்வு நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்களை கொண்ட வாக்குச் சீட்டுகள் பொருத்தப்பட்டன. வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்குச் சீட்டுகளை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் அதிகாரிகள் பொருத்தினர்.

பாஜக வேட்பாளர் சந்தனகுமாரின் பெயர் முதலிடத்தில் உள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் எம்.பி. சுடலையாண்டி, இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஞா. தனலட்சுமி, தேமுதிக வேட்பாளர் மா. சவுந்திரபாண்டியன் பெயர்கள் அடுத்தடுத்து இடம்பெற்றுள்ளன. அவர்களைத் தொடர்ந்து 8 சுயேச்சை வேட்பாளர்களின் பெயர்கள் உள்ளன.

இது தொடர்பாக ஆட்சியர் பிரகாஷ் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார். அபொழுது, வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பப்படும் மின்னணு இயந்திரங்கள் கணினி மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அந்த இயந்திரங்களில் வாக்குச் சீட்டுகள் பொருத்தப்பட்டு சீல் வைக்கப்படும்.

பின்னர், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்படும். இம்மாதம் 17ம் தேதி காலை அங்கிருந்து அவைகள் எடுக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் தனித்தனி வாகனங்களில் வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். தேர்தல் பாதுகாப்பு பணியில் சுமார் 1000 போலீசார் ஈடுபடுத்தப்படுவார்கள். தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக இதுவரை 76 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என ஆட்சியர் தெரிவித்தார்.

உதவி ஆட்சியர் (பயிற்சி) குகா பூனம் தபஸ்குமார், தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட வருவாய் அலுவலர் துரை. ரவிச்சந்திரன், தூத்துக்குடி கோட்டாட்சியர் வேலாயுதம், தேர்தல் வட்டாட்சியர் சாமுவேல் ஆகியோர் உடனிருந்தனர்.

1 கருத்து:

  1. மின்னணு வாக்குப்பதிவில் மோசடி சாத்தியமா ?

    http://manakkan.blogspot.com/2010/04/blog-post_04.html

    பதிலளிநீக்கு

LinkWithin

Blog Widget by LinkWithin