ஸ்ரீவை மக்களை பற்றியும் ஊர் நடப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்,உங்களுடைய கருத்துகளையும் பதிவு செய்யலாம்..
செவ்வாய், 25 ஆகஸ்ட், 2009
செந்தூர் விரைவு ரயிலை தினமும் இயக்க நடவடிக்கை
திருச்செந்தூர்-சென்னை செந்தூர் விரைவு வாராந்திர ரயிலை தினமும் இயக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தூத்துக்குடி எஸ்.ஆர். ஜெயதுரை எம்.பி. திங்கள்கிழமை தெரிவித்தார்.
திருச்செந்தூர் ரயில் நிலையத்திலிருந்து நெல்லை விரைவு ரயிலுக்கு இணைப்பு ரயிலான பயணிகள் ரயில் (வண்டி எண் 736) சேவையை திருச்செந்தூரில் திங்கள்கிழமை அவர் கொடியசைத்துத் தொடக்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவி பேச்சியம்மாள், ஒன்றிய கவுன்சிலர்கள் மாரிமுத்து, அமுதாதல்மேதா, ரயில் நிலைய மேலாளர் வீரமணி, போக்குவரத்து ஆய்வாளர் ஜான்சான், நிலைய அலுவலர் முத்தையா, திமுக வழக்கறிஞர் ஜெ.எஸ்.டி. சாத்ராக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் ஜெயதுரை எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியதாவது:
செந்தூர் விரைவு ரயிலை தினமும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சரிடமும், ரயில்வே அதிகாரிகளிடம் நேரில் வலியுறுத்தியுள்ளேன்.
இதுகுறித்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அக்டோபர் மாதத்திலிருந்து மயிலாடுதுறை வழியாக செந்தூர் விரைவு ரயிலை தினசரி இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், தூத்துக்குடியிலிருந்து பெங்களூர் மற்றும் சென்னைக்கு கூடுதலாக ஒரு விரைவு ரயில் இயக்க கோரிக்கை வைத்துள்ளேன். இதுகுறித்தும் பரிசீலிப்பதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார் என்றார் ஜெயதுரை.
நெல்லை விரைவு ரயிலுக்கு இணைப்பாக இயக்கப்படும் இந்த பயணிகள் ரயில் (வண்டி எண்736) திருச்செந்தூரிலிருந்து தினமும் மாலை 4.10 மணிக்கு புறப்பட்டு மாலை 5.55 மணிக்கு திருநெல்வேலியை சேரும்.
அதேபோல, சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு வரும் நெல்லை விரைவு ரயிலுக்கு இணைப்பாக (வண்டி எண் 735) காலை 9.30 மணிக்கு திருநெல்வேலியிலிருந்து புறப்பட்டு பிற்பகல் 11.15 மணிக்கு திருச்செந்தூருக்கு வரும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக