செவ்வாய், 25 ஆகஸ்ட், 2009

நெல்லையப்பர் கோயில் நுழைவுக் கட்டணத்தில் சலுகை

திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் கோயில் சுவாமி சன்னதியில் அர்த்த மண்டபம் செல்வதற்கு செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 25) முதல் குறிப்பிட்ட நேரத்துக்கு நுழைவுக் கட்டணம் கிடையாது என்று அறங்காவலர்கள் தெரிவித்தனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக அறங்காவலர்களாக இருந்த சோம. திருநாவுக்கரசு, மு. செல்லையா, இரா. சிந்தா சுப்பிரமணியம், சு. தெய்வபகவதி, மு. கணேசன் ஆகியோர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மூன்றாவது முறையாக அவர்கள், அறங்காவலர் உறுப்பினர் பொறுப்பை திங்கள்கிழமை ஏற்றுக் கொண்டனர்.

இதையடுத்து, அறங்காவலர் குழுத் தலைவராக சோம. திருநாவுக்கரசு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அவர்கள் நிருபர்களுக்கு கூட்டாக அளித்த பேட்டி:

இக் கோயிலில் கடந்த மே மாதம் முதல் சுவாமி சன்னதி அர்த்த மண்டபத்துக்கு செல்வதற்கு ரூ. 3 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அறங்காவலர் குழுவின் பதவிக் காலம் முடிந்த பின்னர்தான், இந்தக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால், அறங்காவலர் குழுவினரால் அந்த கட்டணத்தை ரத்து செய்ய முடியவில்லை.

தற்போது புதிதாக பதவி ஏற்றுள்ள நாங்கள், சுவாமி சன்னதியின் அர்த்த மண்டபத்துக்கு பக்தர்கள் செல்ல காலை 7.30 முதல் 10.30 வரையும், மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் இலவசமாக சென்று சுவாமியை தரிசனம் செய்யும் வகையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.

எனவே, பக்தர்கள் செவ்வாய்க்கிழமை முதல் குறிப்பிட்ட நேரத்தில் சுவாமியை எந்த கட்டணமும் செலுத்தாமல் தரிசிக்கலாம்.

அர்த்த மண்டபத்துக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்ட இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு, அந்த உத்தரவை மறு பரிசீலனை செய்யக் கோரி மனு அனுப்பி இருக்கிறோம் என்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin