ஸ்ரீவைகுண்டம் தொகுதி இடைத் தேர்தலில் சுவர் விளம்பர பணிகளில் தி்முகவினர் உற்சாகம் காட்டி வருகின்றனர். ஆனால் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியினரோ படு சோம்பேறிகளாக வலம் வந்து கொண்டுள்ளனர்.
தங்கபாலு தனது ஆளாக போட்டு விட்டாரே என்ற கடுப்பில் ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடாமல் ஓரம் கட்டி விட்டதாக கூறப்படுகிறது.
ஸ்ரீவைகுண்டம் தொகுதி இடைத் தேர்தல் பணிகளில் திமுகவினர் சுறுசுறுப்பாக பணியாற்றி வருகின்றனர். ஸ்ரீவைகுண்டம், சாயர்புரம், ஏரல், பெருங்குளம் பேரூராட்சிகள் மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் திமுகவினர் காங் வேட்பாளர் சுடலையாண்டிக்காக செய்த சுவர் விளம்பரங்களே அதிகமாக காணப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியினர் வேட்பாளர் அறிவிக்கும் முன்பு கை சின்னத்தை மட்டும் வரைந்து வேட்பாளர் பெயரை வெற்றிடமாக விட்டு எழுதிய ஒரு சில விளம்பரங்களில் கூட, வேட்பாளர் பெயரை இன்னும் எழுதாமல் உள்ளனர்.
ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சியில் நகர திமுக செயலாளர் த.பெருமாள் மற்றும் வார்டு செயலாளர்கள் அனைத்து வார்டுகளிலும் கை சின்னத்தை வரைந்து வீடு வீடாக ஓட்டு கேட்டு வருகின்றனர்.
ஆனால் காங் கட்சியினர் அங்கு தேர்தல் பிரசாரத்தையே தொடங்கவில்லை. இதற்கு வாசன் ஆதரவாளர் புறக்கனிக்கப்பட்டு தங்கபாலு ஆதரவாளர் நிறுத்தப்பட்டதே காரணம் என்று கூறப்படுகிறது.
மேலும், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர் இல்லை என்பதால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடார் சமூகத்தவரும் கூட ஒதுங்கி நிற்பதாக கூறப்படுகிறது.
காங்கிரஸார் இப்படி குப்பாச்சு, குழப்பாச்சு வேலைகளில் ஈடுபடுவதைக் கண்டு திமுக தரப்பு அதிருப்தியுடன் இருந்தாலும் கூட, தொகுதியை வென்றாக வேண்டிய அவசியம் காங்கிரஸை விட நமக்குத்தான் அதிகம் உள்ளது. இல்லாவிட்டால் விஜயகாந்த் தட்டிக் கொண்டு போய் விடுவாரே என்ற பீதியில் விழுந்து விழுந்து வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக