செங்கோட்டை: செங்கோட்டை அருகே ஞாயிற்றுக் கிழமையன்றும் கிராமப் புற அரசு பள்ளிகள் செயல்படுகின்றன.
திருநெல்வேலி் மாவட்டம் செங்கோட்டை தாலுகா வடகரை, வாவா நகரம் ஆகிய பகுதிகளில் கடந்த 90 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு விடுமுறை நாட்களான ஞாயிற்றுக் கிழமைகளிலும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
வடகரை முஸ்லீம் உயர்நிலைப்பள்ளி 1916ம் ஆண்டு தொடங்கப்பட்டதாகும். இப் பள்ளியில் சுமார் 1800 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். அதேபோல, 1914ம் ஆண்டு தொடங்கப்பட்ட உசைனியா உயர் நிலைப்பள்ளியில் 800 மாணவ, மாணவிகளும், 1914ம் ஆண்டு தொடங்கப்பட்ட இஸ்லாம் துவக்கப் பள்ளியில் 300 மாணவ, மாணவிகளும் கல்வி பயின்று வருகின்றனர்.
இப்பள்ளிகள் ஞாயிற்றுக் கிழமைகளை பள்ளி அலுவலக தினமாகவும் வெள்ளி, சனி ஆகிய இரு தினங்களை விடுமுறை தினமாகவும் கடைபிடித்து செயல்பட்டு வருகின்றன. இதே ஊரிலுள்ள அரசு மேல் நிலைப்பள்ளி வழக்கம் போல் சனி, ஞாயிறு விடுமுறை தினங்களாக கடைபிடித்து வருகிறது.
இதுகுறித்து அப்பகுதி ஆசிரியர் கூறும்போது, எங்களது பள்ளிகள் உள்ள பகுதி, இஸ்லாமிய மக்கள் நிறைந்ததாகும். வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை நாள். அதனை முன்னோர்கள் பின்பற்றி வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையையும் பள்ளிக்கு விடு்முறை தினமாக வைத்துள்ளனர்.
வழக்கம் போல் ஞாயிற்று கிழமை முதல் வியாழன் வரை 5 நாட்கள் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. தேர்வு நாட்களில் மட்டும் வெள்ளிக்கிழமை பள்ளி இயங்கும். அன்றைய தினம் தேர்வு இருந்தால் மட்டும்.
கிராமப்புற பள்ளியாக இருந்தாலும் காலை எட்டரை மணிக்கு சிறப்பு வகுப்புகள் தொடங்கி விடுவோம். 10ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு காலை ஏழரை மணிக்கே சிறப்பு பயிற்சி அளிக்க தொடங்கி விடுவோம்.
மொத்தத்தில் மாணவ, மாணவிகளின் கல்வித்தரம் மேம்பட வேண்டும் என்பதே எங்கள் பள்ளிகளின் குறிக்கோள்.
நெல்லை மாவட்ட அளவில் நடைபெற்ற திறனாய்வு தேர்வில் 2வது இடமும், தென்காசி கல்வி மாவட்ட அளவில் எங்கள் வடகரை கிராம பள்ளி முதலிடமும் பிடித்துள்ளது என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக