திங்கள், 17 ஆகஸ்ட், 2009

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வக்பு வாரிய நிலங்களை மீட்க துரித நடவடிக்கை

தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பில் உள்ள வக்பு வாரிய நிலங்களை மீட்க துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வக்பு வாரியத் தலைவர் அப்துல் ரகுமான் கூறினார்.

அவர் ஈரோட்டில் நிருபர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

வக்பு வாரியத்துக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக அதிக வழக்குகளும் நடைபெற்று வருகின்றன. வக்பு வாரிய நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்க துரித நடவடிக்கை எடுக்கப்படும்.

இஸ்லாமிய மக்கள் கல்வி, பொருளாதாரத்தில் தலித்துகளைவிட பின்தங்கியிருப்பதாக சச்சார்குழு அறிக்கை தெரிவித்துள்ளது. எனவே கல்லாமை, இல்லாமை பிரச்னைகளுக்குத் தீர்வுகாணவும் வக்பு வாரியம் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

வக்பு வாரியம் சார்பில் மருத்துவக் கல்லூரி, பள்ளிகள், கல்லூரிகள் கட்டுதல், மகளிர் மேம்பாட்டுக்கான திட்டங்கள், தொழிற்பயிற்சி நிலையங்கள், இலவச மருத்துவமனைகள், ஐஏஎஸ், ஐபிஎஸ் பயிற்சி மையங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

வக்பு வாரிய சொத்துகள் மூலம் ஆண்டுக்கு ரூ.2.31 கோடி வருவாய் கிடைக்கிறது. வக்பு வாரியத்தின் பல்வேறு செலவுகளுக்கு இத்தொகை போதவில்லை. தற்போது மாநில அரசு ஆண்டுக்கு ரூ.45 லட்சம் மானியம் அளிக்கிறது. கூடுதல் மானியம் கேட்டு அரசிடம் விண்ணப்பித்துள்ளோம்.

அரசு சார்பில் முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், உதவிகள் குறித்து முஸ்லிம் சமூகத்தினருக்கு முழுமையாகத் தெரியவில்லை. எனவே அரசின் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்வது குறித்து முஸ்லிம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இதற்காக மாவட்டந்தோறும் சென்று, முஸ்லிம் மக்களைச் சந்தித்து வருகிறேன்.

வக்பு வாரியம் சார்பில் திருச்சி அல்லது தஞ்சையில் மருத்துவக் கல்லூரி அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு உதவ முஸ்லிம் பெருமக்கள் தயாராக உள்ளனர். இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதியிடமும் பேசியுள்ளேன். விரைவில் இத்திட்டம் நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin