திங்கள், 17 ஆகஸ்ட், 2009

ஏடிஎம் மையத்தில் திடீர் தீ: ரூ. 15 லட்சம் பணம் தப்பியது


தூத்துக்குடியில் பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையத்தில் ஞாயிற்றுக்கிழமை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. சரியான நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் ரூ. 15 லட்சம் தப்பியது.

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் வாடிக்கையாளர் ஒருவர் அம் மையத்துக்குள் சென்று பணம் எடுத்துள்ளார்.

அப்போது திடீரென வெடிச் சத்தம் கேட்டதாம். ஏ.சி. இயந்திரத்தில் இருந்து புகை வந்ததாம். உடனடியாக வெளியே ஓடி வந்த அவர், இதுகுறித்து காவலாளியிடம் தெரிவித்தார்.

ஏடிஎம் மையத்துக்குச் செல்லும் மின் இணைப்பைத் துண்டித்த காவலாளி உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி உதவி கோட்ட தீயணைப்பு அலுவலர் லோகிதாஸ், தூத்துக்குடி நிலைய அலுவலர் ராஜு ஆகியோர் தலைமையில் தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

தீவிபத்தில் ஏடிஎம் மையத்தின் மேற்கூரை சேதமடைந்தது. ஆனால், பணம் வழங்கும் இயந்திரத்தில் சேதம் எதுவும் ஏற்படவில்லை. லேசான கீறல் மட்டுமே ஏற்பட்டது. இதனால், இயந்திரத்தில் இருந்த சுமார் ரூ. 15 லட்சம் பணம் தப்பியதாக பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏ.சி. இயந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகவே தீவிபத்து ஏற்பட்டதாக தீயணைப்புப் படையினர் தெரிவித்தனர்.

தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸôர் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin