சனி, 1 ஆகஸ்ட், 2009

"இஸ்லாமியர்களிடம் கல்லாமை, இல்லாமை போக்க வக்ப் வாரியம் பாடுபடுகிறது'

இஸ்லாமியர்களிடம் கல்லாமை மற்றும் இல்லாமை போக்க வக்ப் வாரியம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என, அவ்வாரியத் தலைவர் அப்துல் ரகுமான் தெரிவித்தார்.

காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை சார்பில் வக்ப் வாரியத்தின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட அப்துல் ரகுமானுக்கு வரவேற்பு மற்றும் பாராட்டு விழா ஜலாலியா நிக்காஹ் மன்ஸிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முஸ்லிம் ஐக்கிய பேரவை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பேரவைத் தலைவர் எம்.எம்.உவைஸ் தலைமை வகித்தார்.

சி.லெ.சாகுல் ஹமீது, எம்.எஸ்.எம்.பாதுல்அஸ்ஹப், எஸ்.எம்.மிஸ்கீன் சாகிபு பாஸி, பி.ஏ.மஹ்மூது, எஸ்.ஏ.முஹம்மதலி, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் வாவு செய்யது அப்துற் ரஹ்மான், சொளுக்கு எஸ்.எம்.கபீர் மற்றும் வாவு வஜிஹா மகளிர் கல்லூரி செயலாளர் மொகுதஸிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் அப்துல் ரகுமான் பேசியதாவது:

முஸ்லிம்களை பிரிவினைவாதிகள் என்று கூறுகின்றனர். இந்தியாவில் உள்ள அத்தனை தேசங்களையும் ஒன்றாக ஒருங்கிணைத்த பெருமை இஸ்லாமியர்களுக்குத்தான் சேரும்.

இதை வரலாறு சொல்லும். இஸ்லாமிய சமுதாயத்தினர் கல்லாமை மற்றும் இல்லாமை நிலையில் உள்ளனர். 80 சதவிகித இஸ்லாமியர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ளனர். மத்திய, மாநில அரசுகள் வழங்கும் சிறுபான்மை சலுகைகள், பிரதமரின் 15 அம்ச திட்டங்கள் மற்றும் 30 முதல் 35 அறக்கட்டளைகள் வழங்கி வரும் சலுகைகள் முதலியவற்றை அறியாமல் இஸ்லாமியர்களின் கல்லாமை அவர்களின் முன்னேற்றத்தை தடுத்து வருகிறது.

இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவிகித ஒதுக்கீடு கேட்டு பெற்றும் அதன் பலனடையாமல் இருந்து வருவதற்கு கல்லாமையும் காரணம். கிராமங்களில் இஸ்லாமியர்களின் கல்லாமை மற்றும் வறுமையை போக்க வக்ப் வாரிய நிலங்களில் கல்விக்கூடம், பொறியியல் கல்லூரிகள், மகளிர் பயிற்சி தொழிற்கூடங்கள் அமைக்க வாரியம் முன் வந்துள்ளது என்றார் அவர்.

நிகழ்ச்சியில் இஸ்லாமிய இலக்கிய கழகப் பொதுச் செயலர் ஹிதயத்துல்லா, ஏ.ஜே.மீரா சாகிப் ஆகியோர் உரையாற்றினர்.

முன்னதாக, எம்.ஐ.யூசுப் சாகிப் வரவேற்றார். எஸ்.எம்.ஹஸன் மரைக்கார் நன்றி கூறினார்.

வக்ப் வாரியத் தலைவர் காயல்பட்டினத்தில் வாரியத்திற்கு சொந்தமான இடங்களையும், பள்ளிகளையும் நேரில் பார்வையிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin