தமிழகத்தில் 4 முக்கிய நகரங்களில் ஏழைகளுக்கான மருத்துவமனைகள் அமைக்கவும், மருத்துவக் கல்லூரி ஒன்று தொடங்கவும் வக்பு வாரியம் திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் அப்துல் ரகுமான் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்திற்கு வெள்ளிக்கிழமை வந்த அவர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
வக்பு வாரிய சொத்துகளை முறையாகப் பராமரிக்காததால், 75 சதவிகித சொத்துகள் பறிபோய்விட்டன. இருக்கும் சொத்துகளிலும் பெரும்பாலானவை ஆக்கிரமிப்புகளிலும் வழக்குகளிலும் உள்ளன. எஞ்சியவற்றை மீட்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம்.
வக்பு வாரியம் மூலம் சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய இடங்களில் ஏழைகளுக்கு சேவை அளிப்பதற்காக மருத்துவமனைகள் அமைக்கப்பட உள்ளன. இவற்றில் ஒன்றை சிறப்பு வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட மருத்துவமனையாக அமைக்க திட்டமிட்டுள்ளோம்.
மேலும், தஞ்சாவூர் அல்லது திருச்சியில் வக்பு வாரியத்திற்குச் சொந்தமான இடத்தில் இஸ்லாமிய சமுதாயத்தினர் உதவியுடன் மருத்துவக் கல்லூரி தொடங்கவும் திட்டமிட்டுள்ளோம்.
இதற்கு ரூ.30 கோடி முதல் ரூ.40 கோடி வரை செலவாகும். இத் திட்டங்களுக்கு ஆதரவு கேட்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறோம் என்றார் அப்துல் ரகுமான்.
பேட்டியின்போது இஸ்லாமிய இலக்கிய கழகப் பொதுச் செயலர் ஹிதயத்துல்லா மற்றும் நகர பிரமுகர்கள் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக