ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் விவசாயிகள் 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இந்த கோரிக்கைகள் குறித்து திமுக கூட்டணி தனது முடிவை தெரிவிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக தாமிரபரணி நதிநீர் பாதுகாப்பு பேரவை, கிராம வாழ் மக்கள் நலச் சங்கம், வாக்காளர் கூட்டணி ஆகிய அமைப்புகள் சார்பில், தாமிரபரணி நதிநீர் பாதுகாப்பு பேரவை அமைப்பாளர் எஸ். நயினார் குலசேகரன், தி.மு.க. மாவட்டச் செயலர் என். பெரியசாமியை நேரில் சந்தித்து அளித்த மனு விவரம்:
மருதூர் அணை கீழக்கால் என்ற பிரதான கால்வாயை மேம்படுத்த ரூ. 53.45 கோடி மதிப்பீடி செய்யப்பட்டு, தமிழக அரசின் ஆணைக்காக காத்திருக்கும் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
சுமார் ரூ. 1 கோடி மதிப்பீடு செய்யப்பட்டு, வனத் துறையின் தலையிட்டால் தடைப்பட்டு கிடக்கும் ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வாரும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
தாமிரபரணி சாகுபடி விவசாயிகளுக்கு இருபோக சாகுபடிக்கு தண்ணீர் உத்திரவாதம் செய்து வழங்க வேண்டும்.
விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, கூட்டுறவு அலுவலர்களின் குறைபாட்டின் காரணமாக தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களை திரும்ப செலுத்தும்படி போடப்பட்டுள்ள உத்தரவை மறுபரிசீலனை செய்து, பெருங்குளம் கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த 38 விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும்.
ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மாறுதலுக்காக ஓராண்
டிற்கு மேலாக தேங்கி கிடக்கும் 8000 மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2 ஆண்டுகளுக்கு மேலாக மூடிக்கிடக்கும் ஸ்பிக் தொழில்சாலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டன.
இக் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக திமுக கூட்டணியின் முடிவை தெரிவிக்க வேண்டும்.
அதன் அடிப்படையில், இம் மாதம் 6-ம் தேதி நடைபெறும் மாவட்ட தாமிரபரணி நதிநீர் பாதுகாப்பு பேரவை,
கிராம வாழ் மக்கள் நலச்சங்கம் மற்றும் வாக்காளர் கூட்டணியின் கூட்டுக் கூட்டத்தில் தங்களில் நிலையை முடிவு செய்ய இருப்பதாக அதில் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக