பட்டா வழங்கக் கோரி ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள தெய்வச்செயல்புரம் கிராமத்தில் உள்ள 916 ஏக்கர் நிலங்களை பல ஆண்டுகளாக தெய்வச்செயல்புரம், பொட்டலூரணி, வடக்கு காரசேரி, திருவேங்கடபுரம், காசிலிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந் நிலங்களுக்கு அவர்கள் 1989-ம் ஆண்டுமுதல் தீர்வையும் செலுத்தி வருகின்றனராம்.
இந்த நிலங்களை நெல்லையைச் சேர்ந்த சிலர் போலி ஆவணங்கள் மூலம் கிரயம் செய்து கொடுத்ததாகவும், கிரயம் பெற்றோர் பட்டா கோரி அதிகாரிகளை நிர்ப்பந்தம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து விவசாயிகள் அப்போதைய ஆட்சியர் அர. பழனியாண்டியிடம் முறையிட்டபோது, வருவாய்த் துறை அதிகாரிகளிடம் பட்டா மாற்றம் செய்ய உரிய ஆவணங்களை அளித்தால் அவர்கள் பயன்படுத்தும் நிலங்களுக்கு பட்டா வழங்கலாம் என ஆட்சியர் தெரிவித்தாராம்.
ஆனால், இது தொடர்பாக அதிகாரிகள் முறையாக விசாரணை நடத்தி பட்டா வழங்கவில்லையாம்.
இதைக் கண்டித்து தமிழநாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச்செயலர் பாலகிருஷ்ணன் தலைமையில், மார்க்சீய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் கனகராஜ், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் சங்கரசுப்பு, சிஐடியூ மாவட்டச் செயலர் குமாரவேல், மார்க்சீய கம்யூனிஸ்ட் கருங்குளம் ஒன்றியச் செயலர் மாரியப்பன், ஸ்ரீவைகுண்டம் ஒன்றியச் செயலர் கந்தசாமி, பேரூராட்சி முன்னாள் தலைவர் உலகம்மாள், எல்லைநாயக்கன்பட்டி ஊராட்சித் தலைவர் பால்ராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் ஸ்ரீநிவாசன் உள்ளிட்டோர் முன்னிலையில் 500-க்கும் மேற்பட்டோர் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
முற்றுகையில் ஈடுபட்டோருடன் வட்டாட்சியர் பேச்சு நடத்தினார். அப்போது அவர்கள் தங்களுக்கு நிரந்தரப் பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். சுமூகத் தீர்வு ஏற்படாததையடுத்து, அலுவலக வளாகத்தில் போராட்டம் தொடர்ந்தது.
ஸ்ரீவைகுண்டம் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் முத்தையா தலைமையில் போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக