செவ்வாய், 21 ஜூலை, 2009

நிலவுக்கு மனிதன் போய் 40 வருடங்கள் நிறைவு


நியூயார்க்: நிலவில் மனிதன் காலடி எடுத்து வைத்து 40 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளது.

40 வருடங்களுக்கு முன்பு ஆம்ஸ்டிராங், ஆல்ட்ரின், காலின்ஸ் ஆகியோருடன் சென்ற அமெரிக்காவின் அப்பல்லோ விண்கலம் நிலவில் இறங்கியது. நிலவில் காலடி எடுத்து வைத்த முதல் மனிதன் என்ற பெருமையைப் பெற்றார் ஆம்ஸ்டிராங்.

ஒட்டு மொத்த உலகம் நிலவைப் பார்த்து வியந்து நின்ற நாள் இது.

ஜான் எப். கென்னடி தலைமையிலான அமெரிக்க அரசு மேற்கொண்ட இந்த வியப்புக்குரிய பயணம் அமெரிக்கர்களை விண்வெளித்துறையில் தனியிடத்தில் அமர வைத்தது.

அறிவியல் துறையின் வளர்ச்சியி்ல் சாதனைக்குரிய மைல் கல் இந்த நிகழ்ச்சி என்றாலும் கூட, சோவியத் யூனியனுக்குப் போட்டியாக உருவானதே நிலவுப் பயணம் என்பதே நிஜம்.

ஆரம்பத்தில் அப்பல்லோ திட்டத்தில் சில சறுக்கல்கள் ஏற்பட்டன. 3 விணவெளி வீரர்கள் உயிரிழந்தனர். இதனால் நாசா இத்திட்டம் குறித்து மறு பரிசீலனை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டது. ஆனால் அப்பல்லோ 11 விண்கலம், 1969ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி ஆம்ஸ்டிராங், ஆல்ட்ரின், காலின்ஸ் ஆகிய மூன்று அமெரிக்க விண்வெளி வீரர்களுடன் நிலவுப் பயணத்தைத் தொடங்கியது.

நிலவை அடைந்த அப்பல்லோவின் கமாண்ட் மோட்யூலில் காலின்ஸ் தங்கிக் கொள்ள, முதலி்ல் நிலவில் காலடி எடுத்து வைத்தார் ஆம்ஸ்டிராங். அவரைத் தொடர்ந்து 19 நிமிடங்கள் கழித்து நிலவில் இறங்கினார் ஆல்ட்ரின். நான்கு நாள் நிலவுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு பெருமை பொங்க பூமிக்குத் திரும்பியது அப்பல்லோ.

உலகமே வியந்து போய் நின்ற நேரம் அது. அந்த தருணம் குறித்து ஆல்ட்ரின் கூறுகையில், மிகப் பெரிய நிகழ்வு அது, பெருமைக்குரிய தருணம் அது என்றார் ஆல்ட்ரின்.

நிலவில் இறங்கிய ஆம்ஸ்டிராங்கும், ஆல்ட்ரினும் கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் அங்கு இருந்தனர். நிலவில் மாதிரி மண்ணை எடுத்துக் கொண்டனர். புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் நாசா நேரடியாக ஒளிபரப்பு செய்து உலகை சிலிர்க்க வைத்தது.

நிலவுப் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்புவதற்கு முன்பு நிலவில் அமெரிக்க கொடியை நாட்டினர் ஆல்ட்ரினும், ஆம்ஸ்டிராங்கும்.

நிலவைப் பார்த்து கதை பேசிக் கொண்டிருந்த காலத்திற்கு அமெரிக்கா முற்றுப்புள்ளி வைத்து 40 வருடங்கள் உருண்டோடி விட்டத அமெரிக்க மக்கள் மட்டுமல்லாது உலக மக்களும் கூட பெருமையுடன் நினைவு கூருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin