வெள்ளி, 17 ஜூலை, 2009

இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் முஸ்லிம் தனியார் சட்ட வாரியக் கூட்டத்தில் தகவல்


அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் 80வது செயற்குழுக் கூட்டம் கேரள மாநிலம் கோழிக்கூடு நகரத்தில் கடந்த ஞாயிறு (ஜுலை 12ம்) தேதி நடைபெற்றது. வாரியத்தின் தலைவர் சைய்யது முஹம்மது ராபி ஹசன் நத்வி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ்வும் பங்குக் கொண்டார்.

இக்கூட்டத்தில் பாபர் மஸ்ஜித் வழக்கு, லிபராஹான் குழு அறிக்கை, தாடி வைத்தவர்கள் அரசு பணியில் சேரும் போது எதிர்நோக்கும் பிரச்சனைகள், ஒருபால் உறவு குறித்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

பாபர் மஸ்ஜித் வழக்கு நிலைக் குறித்து அந்த வழக்கில் வாரியத்தின் சார்பாக ஆஜராகும் வழக்குறைஞர் ஜப்பர்யாப் ஜீலானி விவரித்தார். பாபரி மஸ்ஜித் யாருக்குச் சொந்தம் என்பது குறித்து கடந்த 60 ஆண்டுகளாக நடைபெற்று வரும் வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்து விட்டது என்றும் முஸ்லிம்கள் தரப்பு வழக்குறைஞர்களின் வாதங்களும் முடிவடைந்து விட்டனவென்றும் இனி எதிர்தரப்பு விவாதங்கள் முடிவடைய வேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு விடும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். பாபர் மஸ்ஜித் தொடர்பான சில ஆவணங்கள் தொலைந்து விட்டதினால் அது தீர்ப்பை பாதிக்காது என்றும் அதில் இரண்டு முக்கிய ஆவணங்கள் ஏற்கெனவே சமர்பிக்கப்பட்டு விட்டன என்றும் அவர் தெரிவித்தார்.

பாபர் மஸ்ஜித் இடிப்பு குறித்து சி.பி.ஐ. தொடர்ந்த குற்றவியல் வழக்கு ராய்பரேலி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது என்றும் இந்த வழக்கை விரைந்து நடத்தி தீர்ப்பு வழங்கிட மத்திய அரசு ஆவணச் செய்ய வேண்டுமென்றும் ஜபர்யாப் ஜீலானி குறிப்பிட்டார்.

லிபரஹான் அணையத்தின் அறிக்கை உடனடியாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை மக்களுக்கு பகிரங்கப்படுத்துவது அரசின் கடமை எனவும் வலியுறுத்தப்பட்டது.

ஒருபால் உறவுகளுக்கு தண்டனை வழங்கும் குற்றவியல் சட்டத்தின் 377ம் பிரிவை நீக்க வேண்டும் என்ற டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை வாரியம் கடுமையாக கண்டித்தது. ஒருபால் உறவுகளில் ஈடுபடுவோருக்கு தண்டனை உறுதிச் செய்யும் வகையில் மத்திய அரசு சட்டம் கொண்டு வரவேண்டும் என்று வாரிய கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பிற மதத் தலைவர்களையும் இப்பிரச்னையில் ஒன்றிணைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

தாடி வைத்துள்ள காரணத்தினால் முப்படைகள் உள்பட சில அரசு துறைகளில் முஸ்லிம்களை பணியில் அமர்த்துவதில் உள்ள பாரபட்சத்தை களைய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பிரதமரை சந்திப்பது என்றும் தீர்மானிக்கப்ட்டது.

சிசு கொலை உள்ளிட்ட சமூக தீமைகள் குறித்து வாரியத்தின் சார்பாக தயாரிக்கப்பட்ட நூல்கள் இக்கூட்டத்தில் வெளியிடப்பட்டன. வாரியத்தின் பொது அமர்வை லக்னோவில் நடத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து உலமா பெருமக்களும், முக்கிய முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களும் இந்த கூட்டத்தில் பங்குக் கொண்டனர்.

Thanks To lalpetexpress

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin