
இந்த தொகுதியில் காங்கிரஸ்- அதிமுக இடையே நேரடி மோதல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீட் பெற இரு கட்சியிலும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ டி. செல்வராஜ் கடந்த 5-ம் தேதி மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, இந்த தொகுதிக்கு ஆகஸ்ட் 18-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்த தொகுதி காங்கிரஸ் வசம் இருந்ததால் இடைத்தேர்தலிலும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கே இத்தொகுதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியை எதிர்த்து அதிமுக நேரடியாக களம் இறங்கும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
தேமுதிக, சமத்துவ மக்கள் கட்சி சார்பிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவரான பொன் பாண்டியன், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் மயிலை பெரியசாமி ஆகியோரும் போட்டியிட வாய்ப்பு கேட்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
அதிமுகவைப் பொருத்தவரை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதனுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இவர், 2006 தேர்தலில் டி. செல்வராஜிடம் 1632 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
2001 தேர்தலில் இதே தொகுதியில் சண்முகநாதன் 2,886 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் டேவிட்செல்வினை தோற்கடித்து, சில மாதங்கள் கைத்தறி துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.
தூத்துக்குடி நகர்மன்ற முன்னாள் தலைவரான எஸ். டேனியல் ராஜும் களம் இறங்க தயாராகி வருகிறார். இவர், இந்த தொகுதியில் 1984, 1989, 1991 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 1996 தேர்தலில் காங்கிரஸ் சார்பில் இதே தொகுதியில் 4-வது முறையாக போட்டியிட்டு திமுகவைச் சேர்ந்த டேவிட்செல்வினிடம் 13,209 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.
2001-ல் தூத்துக்குடி நகர்மன்றத் தலைவராக வெற்றி பெற்ற டேனியல்ராஜ், பின்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தார். தொடர்ந்து 2006 தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அவர் அமைச்சர் பி. கீதா ஜீவனிடம் 15,323 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். எனவே, டேனியல்ராஜ் ஸ்ரீவைகுண்டம் தொகுதியை பெறுவதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளதாக, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
இதைத் தவிர மாவட்ட அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலர் சி.த. செல்லப்பாண்டியன், தூத்துக்குடி ஒன்றிய அதிமுக செயலர் வி.பி.ஆர். சுரேஷ் உள்ளிட்ட சிலரும் இத்தொகுதியில் போட்டியிட சீட் கேட்பதற்கு தயராகி வருகின்றனர்.
வேட்பாளர் யார்? என்பது ஒரிரு நாள்களில் தெரியவரும். அதைத் தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் தொகுதி இடைத்தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக