
ஸ்ரீவைகுண்டம் தொகுதி இடைத் தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு இடதுகை நடுவிரலில் அழியாத மை வைக்கப்படும் என, ஆட்சியர் கோ. பிரகாஷ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இதையடுத்து, தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சியர் கோ. பிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தல் ஆகஸ்ட் 18-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் இம் மாதம் 22-ம் தேதி தொடங்குகிறது.
இந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட வருவாய் அலுவலர் துரை. ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேர்தலில் அனைத்து வாக்குப் பதிவு அலுவலர்களாக மத்திய அரசு ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள். மேலும், மத்திய அரசு அலுவலர்களே நுண் பார்வையாளர்களாகவும் நியமிக்கப்படவுள்ளனர்.
தொகுதியில் உள்ள 172 வாக்குச்சாவடிகளிலும் நடைபெறும் வாக்குப்பதிவு வேப் கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டு, லேப் டாப் கணினிகள் உதவியுடன் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு முழுவதையும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரடியாக பார்வையிட முடியும். பொதுமக்களும் இணைய தளம் மூலமாக வாக்குப் பதிவைப் பார்க்கலாம்.
தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட வருவாய் அலுவலர் செயல்படுவதால், வேட்புமனுத் தாக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலர் அறையில்தான் நடைபெறும்.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க ஸ்ரீவைகுண்டம் தொகுதி 16 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்திற்கும் வட்டாட்சியர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்படும்.
ஸ்ரீவைகுண்டம் தொகுதி இடைத் தேர்தல் 2006 நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின்போது இருந்த எல்லை அடிப்படையில் நடைபெறும். இதற்காக வாக்காளர் பட்டியல் ஒரிரு நாளில் வெளியிடப்படும்.
வாக்கு எண்ணிக்கை சாயர்புரம் போப் கல்லூரியில் நடைபெறும். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்.
இடைத்தேர்தல் என்பதால் 172 வாக்குச் சாவடிகளும் பதற்றமானவை என்றே கருதப்படும். இதிலும், அதிக பதற்றமான வாக்குச் சாவடிகள் தனியாக கண்டறியப்பட்டு கூடுதல் பாதுகாப்பு போடப்படும்.
தேர்தல் பாதுகாப்புப் பணிக்கு மத்திய துணை ராணுவப் படை உள்ளிட்ட சுமார் 2,000 போலீஸôர் ஈடுபடுத்தப்படுவார்கள். மேலும், தேர்தல் பணியில் 1,200 ஊழியர்கள் ஈடுபடுவார்கள்.
தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு வழக்கமாக இடது கை ஆள்காட்டி விரலில் அழியா மை வைக்கப்படும். மக்களவை தேர்தல் முடிந்து 2 மாதங்களே அவதால், அந்த தேர்தலில் வைக்கப்பட்ட மை இன்னும் முழுமையாக அழிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, இடைத்தேர்தலில் இடது கை நடுவிரலில் அழியா மை வைக்கப்படும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சில இடங்களில் நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தேர்தல் துந்த தேர்தலில் வாக்களித்தவர்களுக்கு ஏற்கெனவே இடது கை நடுவிரலில் அழியா மை வைக்கப்பட்டிருக்கும். அவர்களுக்கு இடது கை மோதிர விரலில் அழியா மை வைக்கப்படும் என்றார் ஆட்சியர்.
பேட்டியின்போது, ஸ்ரீவைகுண்டம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட வருவாய் அலுவலர் துரை. ரவிச்சந்திரன் உடனிருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக