திங்கள், 8 ஜூன், 2009

ஜமாஅத் தொழுகையை அலட்சியம் செய்வோரின் நிலை!

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்!

அன்பான சகோதர, சகோதரிகளே! குர்ஆன், ஹதீஸ் என்று பேசும் நம்மில் பலர் பள்ளிவாசலுக்கு சென்று ஜமாஅத்தாக தொழுவதில் அலட்சிம் காட்டுகின்றனர். ஜமாஅத்தாக தொழுவதின் முக்கியத்துவத்தையும் அதை தவற விடுவதால் ஏற்படும் நஷ்டங்களைப் பற்றிய நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைகள் நிறைய இருக்கின்றன.

ஜமாத்அத் தொழுகைகளை விடுபவர்களுக்கான நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைகள்: -

“ஸுப்ஹு, இஷா ஆகிய தொழுகைகளை விட முனாஃபிக் (வேடதாரி)களுக்குப் பாரமான தொழுகை வேறு எதுவும் இல்லை. அந்த இரண்டு தொழுகைகளையும் (ஜமாஅத்தாகத்) தொழுவதிலுள்ள நன்மையை மக்கள் அறிவார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைக்கு வந்து சேர்ந்து விடுவார்கள். இகாமத் சொல்லுமாறு முஅத்தினுக்கு நான் கட்டளையிட்டுப் பின்னர் ஒருவரை இமாமாக நின்று தொழுகை நடத்துமாறு கூறி, அதன் பின்பு எவரேனும் தொழுகைக்கு வராமல் இருந்தால் அவர்களைத் தீயிட்டுக் கொளுத்த நான் நினைத்தேன்.” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

கண்பார்வையற்றவருக்கே வீட்டில் தொழ அனுமதியில்லை: -

கண்பார்வையற்ற ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! என்னை பள்ளிக்கு அழைத்து வருபவர் யாருமில்லை. எனவே வீட்டிலேயே தொழுவதற்கு அனுமதிக்குமாறு வேண்டினார். நபி (ஸல்) அவர்கள் அவருக்கு அனுமதி வழங்கி, அவர் சென்று கொண்டிருக்கும் போது அவரை அவர்கள் அழைத்து தொழுகைக்காக பாங்கு சொல்லப்படுவதை நீர் கேட்கிறீரா? என்றனர். அதற்கவர் ஆம் என்றதும் அந்த அழைப்புக்கு நீ (ஜமாஅத்துக்கு வருவதன் மூலம்) பதிலளிப்பீராக! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), முஸ்லிம்.

இயலாதவரைக் கூட கைத்தாங்கலாக பள்ளிக்கு அழைத்துவரவேண்டும்: -

ஜமாஅத்தில் கலந்து கொள்ளாது தன் வீட்டில் தொழுபவரைப் போல நீங்களும் உங்கள் வீடுகளில் தொழுவீர்களானால் உங்கள் நபியின் வழிமுறையை கைவிட்டவர்களாவீர்கள். உங்கள் நபியின் வழிமுறையை நீங்கள் கைவிட்டீர்களானால் நிச்சயம் வழிதவறிப் போவீர்கள். எவர் உளூச் செய்து - அதை நல்ல முறையில் செய்து இப் பள்ளிகளில் ஏதேனும் ஒன்றை நாடி வருகிறாரோ அல்லாஹ் அவருக்கு - அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் பதிலாக ஒரு நன்மையை எழுதி, ஒரு பதவியை உயர்த்துகிறான். மேலும் ஒரு தீமையை அவரை விட்டும் அகற்றுகிறான். மேலும் ஒரு தீமையை அவரை விட்டும் அகற்றுகிறான். எங்களிடையே நான் பார்த்திருக்கிறேன் பகிரங்கமான சந்தர்ப்பவாதிகளைத் தவிர வேறெவரும் ஜமாஅத்துக்கு வராமல் இருக்க மாட்டார். திண்ணமாக இயலாதவரைக் கூட இரண்டு பேர் கைத்தாங்கலாக அழைத்து வந்து வரிசையில் நிறுத்தப்படும் என்று இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம் :முஸ்லிம்.

ஜமாஅத்தை விட்டு தனியாக தொழுபவர் ஷைத்தானின் பிடியில் எளிதில் அகப்பட்டுவிடுவார்: -

‘ஒரு பேரூரில் அல்லது சிற்றூரில் முஸ்லிம்களில் மூவர் மட்டுமே வாழ்ந்து, அங்கு ஜமாஅத்துடன் தொழுகை நிறைவேற்றப்படவில்லையானால் அவர்கள் மீது ஷைத்தான் ஆதிக்கம் பெற்றுவிடுகிறான். எனவே ஜமாஅத்துடன் தொழுவதை இன்றியமையாததெனக் கொள்! ஏனென்றால், இடையனை விட்டும், மந்தையை விட்டும் விலகிச் செல்லும் ஆட்டையே ஓநாய் (எளிதில்) வேட்டையாடுகிறது’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள். அறிவிப்பவர் : அபுத் தர்தா (ரலி), ஆதாரம் : அபூதாவூது.

ஜமாஅத் தொழுகையை விடுவது முனாஃபிக் (நயவஞ்சகத்)தனம்: -

எவரொருவர் அல்லாஹ்வுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்த நிலையில் மறுமைநாளில் அவனைச் சந்திக்க விரும்புகின்றாரோ அவர் - ஐவேளைத் தொழுகைகளை மிகவும் பேணுதலுடன் கடைப்பிடிக்க வேண்டும். அவற்றைப் பள்ளியில் சென்று ஜமாஅத்துடன் நிறைவேற்ற வேண்டும். ஏனென்றால் அல்லாஹ் உங்களின் தூதருக்கு ‘சுன்னத்துல் ஹுதா’வைக் கற்றுத் தந்துள்ளான். இத்தொழுகைகள்யாவும் அதனைச் சார்ந்தவைதாம். நயவஞ்சகர்கள் தம் தொழுகைகளை வீட்டில் இருந்துகொண்டு நிறைவேற்றுவது போல் நீங்களும் வீட்டில் இருந்தவாறே தொழுகைகளை நிறைவேற்றுவீர்களாயின் நீங்கள் திருத்தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறையை விட்டுவிட்டால் நேரிய வழியை (ஸிராத்துல் முஸ்தகீமை) விட்டவர்களாகின்றீர்கள். ஆதாரம் :முஸ்லிம்.

தக்க காரணமின்றி ஜமாத் தொழுகையை விட்டுவிட்டால் அவனின் தொழுகை மறுமையில் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது: -

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் ‘ஒருவன், முஅத்தின் (பாங்கு சொல்பவர் ) தொழுகைக்காக விடுக்கம் அழைப்பினைச் செவியேற்றதும் - அதன்பக்கம் விரைந்து வருவதிலிருந்து தடுக்கும் காரணம் எதுவுமில்லையானால், தனித்து நின்று நிறைவேற்றப்படும் அவனின் தொழுகை (மறுமைநாளில்) ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.’

அப்போது தோழர்கள் பெருமானார் (ஸல்) அவர்களிடம், ‘காரணம் என்று கூறினீர்களே, அது என்ன? எவை எவை காரணங்களாக அமைய முடியும்?’ என வினவ, ‘அச்சமும் நோயும் தாம்!’ என்று பெருமானார் (ஸல்) விடை பகர்ந்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாரம் :
அபூதாவூத்

நன்றி : சுவனத்தென்றல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin