ஜமாஅத் தொழுகை தனியாக தொழுவதை விட இருப்பத்தி ஐந்து மடங்கு சிறந்தது. மேலும் வானவர்களும் ஜமாத் தொழுகைக்காக செல்பவர்களுக்காக பிரார்த்திக்கின்றனர்: -
“ஒருவர் தம் வீட்டில் அல்லது கடை வீதியில் தொழுவதை விட ஜமாஅத்துடன் தொழுவது இருபத்தி ஐந்து மடங்கு சிறந்ததாக இருக்கிறது. அதாவது, ஒருவர் உளூச் செய்து, அதை அழகாகவும் செய்து, பின்னர் தொழ வேண்டுமென்ற எண்ணத்திலேயே பள்ளிவாசலுக்குப் புறப்பட்டால் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் அல்லாஹ் ஓர் அந்தஸ்தை உயர்த்துகிறான். ஒரு பாவத்தை அழிக்கிறான். அவர் தொழுமிடத்தில் அவருக்காக வானவர்கள் பிரார்த்திக்கின்றனர். தங்கள் பிரார்த்தனையில் ‘இறைவா! நீ இந்த மனிதனின் மீது அருள் புரிவாயாக! உன்னுடைய கருணையை அவருக்குச் சொரிவாயாக!’ என்றும் கூறுவார்கள். உங்களில் ஒருவர் தொழுகையை எதிர்பார்த்திருக்கும் போதெல்லாம் அவர் தொழுகையிலேயே இருக்கிறார்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம் : புகாரி.
ஜமாஅத்தாக தொழுபவரின் ஈமான் செழித்தோங்குகிறது: -
பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் ‘ஒருவன் தனித்து நின்று நிறைவேற்றும் தொழுகையைவிட மற்றொருவனுடன் சேர்ந்து நிறைவேற்றம் தொழுகை ஈமானின் வளப்பத்திற்கும் முன்னேற்றதிற்கும் காரணமாகின்றது. மேலும், ஒருவருடன் சேர்ந்து அவர் நிறைவேற்றும் தொழுகையைவிட இருவருடன் சேர்ந்து நிறைவேற்றும் தொழுகை மென்மேலும் ஈமான் செழித்தோங்கக் காரணமாகின்றது. இன்னும் எத்தனை அதிகப் பேருடன் மக்கள் தொழுகையை நிறைவேற்றுகின்றார்களோ அல்லாஹ்விடத்தில் அது மிகவும் உதந்ததாகும். (அந்த அளவு அல்லாஹ்வுடன் தொடர்பு வலுப்பெறும்.) அறிவிப்பவர்: உபைபின் கஅப் (ரலி), ஆதாரம் : அபூதாவூது
ஜமாஅத் தொழுகைக்காக நீண்ட தூரம் நடந்து வருபவர்களுக்கு அதிக நன்மையுள்ளது: -
‘யார் நீண்ட தூரத்திலிருந்து நடந்து தொழுகைக்கு வருகிறார்களோ அவர்களுக்கு மற்ற எல்லோரையும் விட அதிகம் நன்மை உண்டு. ஜமாஅத் தொழுகையை எதிர்பார்த்திருந்து இமாமுடன் தொழுகிறவருக்குத் தனியாகத் தொழுதுவிட்டுத் தூங்கி விடுபவரை விட அதிகம் நன்மையுண்டு’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அபூ மூஸா(ரலி) அறிவித்தார். ஆதாரம் : புகாரி.
பஜ்ர் மற்றும் இஷா தொழுகைகளை ஜமாஅத்தாக தொழுவதின் சிறப்புகள்: -
நம்முடைய சகோதரர்களில் சிலர் பள்ளிவாசலுக்கு சென்று தொழுதாலும் இஷா மற்றும் பஜ்ர் தொழுகை நேரங்களில் பள்ளிக்கு வருவதற்கு அலட்சியமாக இருந்து விடுகின்றனர். அதிலும் குறிப்பாக பஜருடைய தொழுகையில் பள்ளியில் எண்ணிக்கை மிக சொற்பமாகவே காணப்படுகின்றது.
தவழ்ந்தாவது பள்ளிக்கு வருவார்கள்: -
“தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழுவதன் சிறப்பை மக்கள் அறிவார்களானால் அதற்காக விரைந்து செல்வார்கள். ஸுப்ஹ் தொழுகையிலும் அதமா(இஷா)த் தொழுகையிலும் உள்ள நன்மையை அறிவார்களானால் தவழ்ந்தாவது (ஜமாஅத்) தொழுகைக்கு வந்து சேர்ந்து விடுவர்.” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூ ஹுரைரா(ரலி) அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம் : புகாரி.
நன்றி : சுவனத்தென்றல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக