திருநெல்வேலி சாப்டர் மேல்நிலைப் பள்ளியில் அதிக நன்கொடை வசூலிப்பதாகக் கூறி, இந்திய மாணவர் சங்கத்தினர் நேற்று முற்றுகைப் போராட்டம் நடத்தினர். திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள சாப்டர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு அதிக நன்கொடை வசூலிப்பதாக இந்திய மாணவர் சங்கத்தினர் புகார் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், அந்த சங்கத்தினர் திங்கள்கிழமை பள்ளியின் தாளாளர் ஞானதுரை, பள்ளித் தலைமையாசிரியர் செல்வகோடி ஆகியோரை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் அருண்பிரவீன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் உச்சிமாகாளி, துணைத் தலைவர் கஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதுகுறித்து அருண் பிரவீன் நிருபர்களிடம் கூறியதாவது, இப்பள்ளியில் இதுவரை இல்லாத வகையில், இந்த ஆண்டு நன்கொடை அதிகமாக வசூலிக்கப்படுகிறது.
6ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களிடம் ரூ.4 ஆயிரமும்,
9, 10-ம் வகுப்பு மாணவர்களிடம் ரூ.6 ஆயிரமும்,
11, 12ம் வகுப்பு மாணவர்களிடம் குறைந்தது ரூ.8 ஆயிரம்
முதல் படிக்கும் பிரிவைப் பொருத்து ரூ.14 ஆயிரம் வரையும் நன்கொடை வசூலிக்கப்படுகிறது.
ஆங்கிலவழிக் கல்வியில் படிக்கிற மாணவர்களிடம் இதைவிட ரூ.2 ஆயிரம் அதிகமாக நன்கொடை வசூல் செய்யப்படுகிறது.
இதேபோல மாநகரில் உள்ள பெரும்பாலான தனியார் பள்ளிகளில் நன்கொடை என்ற பெயரில் பெரிய வசூலே நடக்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதன் காரணமாகத்தான் நாங்கள் போராட்டம் நடத்தி வருகிறோம் என்றார் அருண்பிரவீன்.
இதனிடையே முற்றுகை போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது பத்திரிக்கை புகைப்படக்காரர் ஒருவரின் சட்டையைப் பிடித்து தலைமையாசிரியர் வெளியே தள்ளினார். அப்பொழுது பத்திரிக்கையாளர்கள் ஒன்று சேர்ந்து தலைமை ஆசிரியர் மண்ணிப்பு கேட்கும்படி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த திடீர் முற்றுகைப் போராட்டத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட பள்ளிகளில் நன்கொடை என்ற பெயரில் கட்டாய நிதி வசூல் செய்து வருகின்றனர். அரசு ஒருபுறம் அனைவருக்கும் கல்வித்திட்டம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டம் என்ற பெயரில் பிரச்சாரம் செய்து அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் வேளையில் பள்ளிகளின் இதுபோன்ற கட்டாய நன்கொடை வசூலினை தடுத்து நிறுத்தாவிட்டால் அனைவருக்கும் கல்வித்திட்டம் என்பது மிகவும் அரிதான ஒன்றாகவே இருக்கும்
தகவல் : தூத்துக்குடி வெப் நியூஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக