2011-ம் ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் நாடுகளின் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்குவதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி) அறிவித்துள்ளது.
இதற்கு பாகிஸ்தானில் நிலவும் நிலையற்ற பாதுகாப்புத் தன்மையே காரணம் என துபாயில் செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்த ஐ.சி.சி. தலைவர் டேவிட் மோர்கன், உலகக்கோப்பை போட்டிகளை மிகவும் பாதுகாப்பான முறையில் வெற்றிகரமாக நடத்துவதே எங்களின் முதன்மைக் குறிக்கோள் என்றார்.
ஐ.சி.சி.யின் முடிவு பாகிஸ்தானில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை வேதனைப்படுத்தும் என்பதால் உலகக்கோப்பை போட்டிகளை பாகிஸ்தானில் நடத்த முடியாததற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் அவர் கூறினார்.
2011 ம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை ஆசிய கண்டத்தில் உள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகளை ஒருங்கிணைத்து நடத்துவதாக ஐ.சி.சி. முன்பு அறிவித்தது.
கடந்த சில வாரங்களுக்கு முன் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் சென்ற இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல், தாலிபான்கள் கை ஓங்குவது உள்ளிட்ட காரணங்களால் பாகிஸ்தானில் உலகக்கோப்பை போட்டிகளை நடத்துவதை கைவிடுவதாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக