திங்கள், 30 மார்ச், 2009

பாதுகாக்கப்படும ஃபிர்அவ்னின் உடல்! சிந்திக்கும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி!

1898 ல் எகிப்தில் கண்டெடுக்கப்பட்ட அதிசய மம்மி 3000 ஆண்டு பழமை மிக்க அன்றைய எகிப்தை ஆண்டு வந்த இரண்டாம் ரம்சீஸ் என்ற ஃபிர்அவ்னின் உடல் என்று அடையாளம் காணப்பட்டது. தொல் பொருள் ஆராய்ச்சிக்கு தனி முக்கியத்துவம் அளித்து வந்த ஃப்ரான்சு நாடு அந்த உடலை ஆராய்ச்சி செய்வதற்காக எகிப்திடம் கேட்டு வாங்கியது. மருத்துவ அறிவியல் துறை ஆய்வாளரான டாக்டர் மோரிஸ் புகை தலைமையிலான குழு அவ்வுடலை ஆய்வுக்கு உட்படுத்தியது. உடலில் படிந்திருந்த உப்பின் துணிக்கைகளை வைத்து இது கடலில் மூழ்கி இறந்தது என்ற முடிவுக்கு வந்தனர். ஆய்வின் முடிவில் அவ்வுடல் மூவாயிரம் ஆண்டு பழமையான எகிப்தை ஆண்ட மன்னனின் உடல் என்று கண்டறியப்பட்டது! அந்நேரம் பாதுகாக்கப்படுவதாக இறைவன் வாக்களித்திருக்கும் ஃபிர்அவ்னின் உடல் பற்றிய பேச்சு சிந்தனையாளர்கள் மத்தியில் எழ ஆரம்பித்தது. இது பற்றிய செய்தி மோரிஸ் புகையின் கவனத்துக்கும் வந்தது. 1898 ல் கண்டெடுக்கப்பட்ட மம்மியைக் குறித்து 1400 வருடங்களுக்கு முன்பே கூறப்பட்டதா? இது எப்படி சாத்தியமாகும்? என்று சிந்தனை செய்தார் மோரிஸ் புகை.

சிந்தனையில் மோரிஸ் புகை!

திருக்குர்ஆன் கடலில் மூழ்கி இறந்த பின்னர் ஃபிர்அவ்னின் உடல் பாதுகாக்கப்படும் என்று பிரகடனம் செய்கிறது. தோரா மற்றும் பைபிளின் பழய ஏற்பாடும் மோசேயின் காலத்தில் இஸ்ரவேலர்களைக் கொடுமைப் படுத்திய பர்வோன் மன்னனைப் பற்றியும் இறுதியில் அவன் கடலில் மூழ்கி இறந்தான் என்றும் கூறுகிறது. இதோ என் முன்னாலிருப்பது அக்காலத்தில் இறந்து விட்ட உடல் அல்லவா? என் ஆராய்ச்சியின் மூலம் நான் அறிந்திருக்கும் முடிவை 1400 ஆண்டுகளுக்கு முன் முஹம்மது (ஸல்) எவ்வாறு அறிந்து கொண்டார்கள்? பைபிளில் தேடினார் மோரிஸ் புகை. பர்வோன் மன்னனின் முடிவைப் பற்றி யாத்திராகமம் இவ்வாறு கூறுகிறது.

ஜலம் திரும்பிவந்து, இரதங்களையும் குதிரைவீரரையும் அவர்கள் பின்னாக சமுத்திரத்தில் பிரவேசித்திருந்த பார்வோனுடைய இராணுவம் அனைத்தையும் மூடிக்கொண்டது; அவர்களில் ஒருவனாகிலும் தப்பவில்லை. (யாத்திராகமம் 14 :28)

இவ்வுடல் பாதுகாக்கப்படும் என்பதற்கான எந்தக் குறிப்பையும் பைபிள் வழங்கவில்லை.

ஆய்வுக்குப் பின்னர் பர்வோன் மன்னனின் உடல் விலை உயர்ந்த கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டு தனி மரியாதையுடன் எகிப்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் மோரிஸ் புகை சிந்தனையில் ஆழந்தார்! இவ்வுடல் பாதுகாக்கப்படும் என்ற குர்ஆனின் செய்தி அவரை சிந்திக்கத் தூண்டியது. இதே வேளையில் தான் சவூதி அரேபியாவில் மருத்துவ அறிவியல் சம்மந்தமான ஒரு மாநாடு நடை பெற்றது. மோரிஸ் புகை அதில் கலந்து கொண்ட போது தான் கண்டு பிடித்த உண்மையையும் தண்ணீரில் மூழ்கி இறந்த பின்னர் பாதுகாக்கப்பட்ட உடலைக் குறித்தும் இஸ்லாமிய அறிஞர்களிடம் கலந்துரையாடினார். அப்போது அங்கிருந்த அறிஞர்களில் ஒருவர் திருக்குர்ஆனைத் திறந்து கடலைக் கடந்து செல்லும் இஸ்ரவேலர்களைப் பின் தொடர்ந்து விரட்டிச் சென்ற ஃபிர்அவ்ன் மன்னன் மூழ்கடிக்கப்பட்டதையும் அவனது உடல் பின்வரும் தலைமுறைக்கு ஓர் அத்தாட்சி என்ற நிலையில் பாதுகாக்கப்படும் என்ற இறைவனின் பிரகடனத்தை வாசித்துக் காட்டினார். அவ்வசனம்

எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உன் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்"

(அல்-குர்ஆன் 10: 92)



இவ்வசனம் மோரிஸ் புகை அவர்களிடம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அங்கு கூடியிருந்தவார்களுக்கு முன்னால் அவர் அறிக்கையிட்டார்! அஷ்ஹது அன் லாஇலாஹ இல்லல்லாஹ்! வ அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்!

கெய்ரோ அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட மம்மிகளில் ஃபிர்அவ்னின் உடல் மட்டும் வித்தியாசமானதாக உள்ளது. மற்றவை ரசாயன திரவங்களைக் கொண்டும் துணிகளில் பொதிந்தும் வைக்கப்பட்டிருக்கும் போது ஃபிர்அவ்னின் உடல் மட்டும் அப்படியே பாதுகாக்கப்படுகிறது! திருக்குர்ஆனின் அறைகூவலை உண்மைப் படுத்திக் கொண்டிருக்கும் இந்த சாட்சியைக் கண்கூடாகக் கண்ட பின்னரும் மக்களில் பெரும்பாலோர் இன்னும் உறங்கிக் கொண்டுதான் உள்ளனர். திருக்குர்ஆனின் கூற்று எவ்வளவு உண்மை!

”நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்" (அல்-குர்ஆன் 10:92)




நன்றி : http://irudithoodu.blogspot.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin