திங்கள், 30 மார்ச், 2009

நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் தேர்தல் களம் சிறப்பு கண்ணோட்டம்

பாராளுமன்ற தேர்தல் பணிகளில் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தி.மு.க. கூட்டணியில் நெல்லை மாவட்டத்தில் உள்ள நெல்லை, தென்காசி ஆகிய 2 தொகுதிகளும் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. போட்டியிடுகிறது. தொகுதி ஒதுக்கப்பட்டதையடுத்து வேட்பாளர் தேர்வில் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

அ.தி.மு.க. கூட்டணியில் தென்காசி தொகுதி இந்திய கம்யூனிஸ்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நெல்லையில் அ.தி.மு.க. போட்டியிடும் என்று தெரிகிறது. தூத்துக்குடி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்படலாம்.

நெல்லை தொகுதி1952-ல் உருவாக்கப்பட்டது. 14 தேர்தல்களை இந்த தொகுதி சந்தித்துள்ளது.தொடக்கத்தில் 3 தேர்தல்களில் காங்கிரஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றது. காங்கிரஸ் சார்பில்1951-ம் ஆண்டிலும், 1957-லும் ப.டி.தாணுப்பிள்ளை வெற்றி பெற்றார்.

1967-ல் தி.மு.க. கூட்டணியில் இருந்த சுதந்திரா கட்சியும், 1971-ல் தி.மு.க., இந்திரா காங்கிரஸ் கூட்டணியில் இருந்த இந்திய கம்யூனிஸ்டும் வெற்றி பெற்றன.

1967-ல் சுதந்திரா கட்சி சார்பில் சேவியர், 1971-ல் இந்திய கம்யூனிஸ்டு முருகானந்தமும் வெற்றி பெற்றார்கள்.

1977-ம் ஆண்டு தி.மு.க. சார்பில் கதிரவனும், அ.தி.மு.க. சார்பில் ஆலடி அருணாவும் நேரடியாக மோதினர். இதில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஆலடி அருணா வெற்றி பெற்றார்.

1980-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க. அணியில் ஆலடி அருணாவும், தி.மு.க. சார்பில் சிவப்பிரகாசமும் களம் கண்டனர்.இதில் தி.மு.க. சிவப்பிரகாசம் வெற்றி பெற்றார்.

1984, 1989, 1991 தேர்தல்களில் இந்த தொகுதியை அ.தி.மு.க. தக்கவைத்தது. 3 முறையும் கடம்பூர் ஜனார்த்தனன் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து தி.மு.க. போட்டியிட்டது.

1996-ல் மீண்டும் இங்கு தி.மு.க. வெற்றிபெற்றது. சிவப்பிரகாசம் மீண்டும் எம்.பி. ஆனார். 1998-ம் ஆண்டு தி.மு.க. சார்பில் நடிகர் சரத்குமாரும், அ.தி.மு.க. சார்பில் மீண்டும் கடம்பூர் ஜனார்த்தனனும் போட்டியிட்டனர். இதில் கடம்பூர் ஜனார்த்தனன் வெற்றி பெற்றார்.

1999-ல் அ.தி.மு.க. சார்பில் பி.எச்.பாண்டியனும், தி.மு.க. சார்பில் இன்றைய அமைச்சர் கீதாஜீவனும் போட்டியிட்டனர். இதில் பி.எச். பாண்டியன் வெற்றி பெற்றார்.

கடந்த 2004-ம் ஆண்டு தேர்தலில் இந்த தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. இதில் தனுஷ்கோடி ஆதித்தன் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார்.

இவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் அமிர்தகணேசன் போட்டியிட்டார். இதில் தனுஷ்கோடி ஆதித்தன் வெற்றி பெற்றார்.இந்த முறை நெல்லை தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் மீண்டும் தனுஷ்கோடி ஆதித்தன் போட்டியிடுவார் என்று தெரிகிறது.

அ.தி.மு.க. கூட்டணியில் நெல்லையில் அ.தி.மு.க. போட்டியிட வாய்ப்பு உள்ளது.தே.மு.தி.க. சார்பில் மைக்கேல் ராயப்பன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்தல் பணியை தொடங்கி விட்டார். பா.ஜனதா கூட்டணியில் இங்கு ச.ம.க. தலைவர் சரத்குமார் போட்டியிட உள்ளார்.

இதே போல் தென்காசி தொகுதியில் 1957 முதல்1991-ம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சி போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது.1957-ல் சங்கரபாண்டியனும், 1962-ல் எம்.பி. சாமியும், 1967-ல் ஆர். எஸ். ஆறுமுகமும், 1971-ல் தி.மு.க. கூட்டணியில் காங். சார்பில் செல்லச்சாமியும் வெற்றி பெற்றார்கள்.

1977, 1980, 1984, 1989, 1991 தேர்தல்களில் அ.தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் எம். அருணாசலம் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.1996-ல் தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. சார்பில் போட்டியிட்டு அருணாசலம் வெற்றி பெற்றார்.

1998-ல் இந்த தொகுதி அ.தி.மு.க.வசம் சென்றது. 1998, 1999- தேர்தல்களில் அ.தி.மு.க. சார்பில் முருகேசன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2004 தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டும், அ.தி.மு.க. சார்பில் முருகேசனும் போட்டியிட்டனர். இந்திய கம்யூனிஸ்டு சார்பில் போட்டியிட்ட அப்பாத்துரை வெற்றி பெற்றார்.

10 முறை காங்கிரஸ் வசம் இருந்த தென்காசி தொகுதி 3 தேர்தலுக்கு பின் தற்போது மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த முறையும் வெற்றி பெற வேண்டும் என காங்கிரசார் சுறுசுறுப்பாக தேர்தல் பணியில் இறங்கி விட்டனர்.

அ.தி.மு.க. கூட்டணியில் இந்த தொகுதி இந்திய கம்யூனிஸ்டுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. தி.மு.க. கூட்டணியில் கடந்த முறை இந்திய கம்யூனிஸ்டு வெற்றி பெற்றதால் இம்முறை அ.தி.மு.க. கூட்டணியில் இதை தக்கவைக்க இந்திய கம்யூனிஸ்டு திட்டமிட்டுள்ளது.

1998 முதல் 3 தேர்தல்களில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இந்த முறையும் இங்கு போட்டியிடுவார் என்று தெரிகிறது. தே.மு.தி.க.வும் இங்கு தனித்து களம் காணுகிறது.

பா.ஜனதா- ச.ம.க. கூட்டணியும் தென்காசியை குறிவைத்துள்ளது. இதனால் தென்காசி தொகுதி 5 முனை போட்டியை எதிர்கொள்ளும் என்று கருதப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்த திருச்செந்தூர் தொகுதி தற்போது தொகுதி மறுசீரமைப்பில் தூத்துக்குடி தொகுதிஆகி உள்ளது. இதில் தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், கோவில்பட்டி ஆகிய தொகுதிகள் உள்ளன.

முன்பு திருச்செந்தூர் பாராளுமன்ற தொகுதியில் இருந்த சாத்தான்குளம், சேர்மாதேவி சட்டசபை தொகுதிகள் தற்போது நீக்கப்பட்டு உள்ளன.திருச்செந்தூர் பாராளுமன்ற தொகுதி 1957, 1962 ஆண்டுகளில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கணபதி, டி.டி.கிருஷ்ணமாச்சாரி ஆகியோரை போட்டியின்றி தேர்ந்தெடுத்த பெருமைக்கு உரியது.

இதன் பிறகு 1996வரை காங்கிரஸ் வசம் இருந்த இந்த தொகுதி 1998-ல் அ.தி.மு.க. வசம் ஆனது. அப்போது நடிகர் ராமராஜன் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

1999-ல் இங்கு தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஏ.டி.கே. ஜெயசீலன் வெற்றிபெற்றார். கடந்த 2004-ம் ஆண்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ராதிகா செல்வி வெற்றி பெற்றார்.

இந்த முறை தொகுதி மறுசீரமைப்பில் தூத்துக்குடி தொகுதி முதன் முறையாக தேர்தலை சந்திக்கிறது. தி.மு.க. கூட்டணியில் இங்கு தற்போது தி.மு.க. போட்டியிடுகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் இந்த தொகுதி ம.தி.மு.க.வுக்கு போகலாம் என தெரிகிறது.

தே.மு.தி.க. சார்பில் எம்.எஸ். சுந்தர் அறிவிக்கப்பட்டு தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். பா.ஜனதா- ச.ம.க. கூட்டணியில் இங்கும் ச.ம.க. களம் இறங்கலாம் என்று கூறப்படுகிறது.

மொத்தத்தில் நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.


தகவல் : மாலைமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin