வெள்ளி, 27 மார்ச், 2009

முகம் மாறியுள்ள திருநெல்வேலி லோக்சபா தொகுதி



திருநெல்வேலி தொகுதியில் இதுவரையிலும் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம் என நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருந்தது. திருநெல்வேலி தொகுதி என கூறினாலும் நெல்லை, பாளையங்கோட்டையைத்தவிர மற்ற நான்கும் தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்தன

மறுசீரமைப்பிற்கு பின்னர் தற்போதைய நெல்லை தொகுதியில் உள்ள சட்டசபை தொகுதிகள்:

1.திருநெல்வேலி
2.பாளையங்கோட்டை
3.நாங்குநேரி
4.ராதாபுரம்
5.அம்பாசமுத்திரம்
6.ஆலங்குளம்

நெல்லை தொகுதியில் மொத்தம் 10 லட்சத்து 53 ஆயிரத்து 645 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஐந்து லட்சத்து 21 ஆயிரத்து 795 பேர் ஆண்கள், ஐந்து லட்சத்து 31 ஆயிரத்து 850பேர் பெண்ள். ஆண்களை விட பெண்கள் சற்று அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

வழக்கமாக நெல்லை தொகுதிகள் தி.மு.க., அ.தி.மு.க.,என திராவிட கட்சிகளே அடுத்தடுத்து போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளன.கடந்த முறை நெல்லை தொகுதியை 'தொல்லை'யாக கருதிய தி.மு.க.,கடைசிநேரத்தில் காங்கிரசுக்கு ஒதுக்கியது. இந்த முறை தி.மு.க.,போட்டியிட விரும்புவதாக தெரிகிறது. இருப்பினும் முக்கியபிரமுகர்கள் அனைவரும் பதவிகளில் இருப்பதால் புதிய வேட்பாளர்களை தேடும் நிலையில் தி.மு.க.,உள்ளது.

கடந்த முறை திருச்செந்தூரில் போட்டியிட்டு மத்திய அமைச்சரான ராதிகாசெல்வி, கே.பி.கே.குமரன் போன்றோர் சீட் கேட்க வாய்ப்புள்ளது. தற்போதைய காங்., எம்.பி.,தனுஷ்கோடி ஆதித்தன் விபத்திற்கு பிறகு உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் காங்கிரஸ் போட்டியிடுவதாக இருந்தால் புதிய வேட்பாளர்களுக்கு வாய்ப்பிருக்கிறது. காங்கிரசிலும் எம்.பி.,சீட் கேட்ட முக்கிய பிரமுகர்களான பீட்டர் அல்போன்ஸ், வசந்தகுமார், வேல்துரை போன்றவர்கள் எம்.எல்.ஏ.,க்களாக உள்ளனர்.
கடந்த முறை சீட்டுக்காக போராடி, கடைசியில் கோட்டை விட்ட வாசன் ஆதரவாளரான என்.டி.ஏ., சார்லசுக்கு இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளது. அ.தி.மு.க.,வில்தான் சீட் கேட்டு பலத்த போட்டியே நிலவுகிறது. இப்போதே வேட்பாளர் பெயருக்கு மட்டும் இடத்தை விட்டுவிட்டு விளம்பரங்களிலும் முன்னணியில் உள்ளனர்.

முன்னாள் எம்.பி.,பி.எச்.பாண்டியன், முன்னாள் அமைச்சர் நயினார்நாகேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பி.ஜி.ராஜேந்திரன், ஆர்.பி.ஆதித்தன் என தலைமையிடம் சீட் கேட்டு 90க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். அதில் அனேகம்பேர் போட்டியிடவும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

கடைசி நேரத்தில் தி.மு.க., அ.தி.மு.க.,வில் புதுமுகங்களை களத்தில் இறக்கவும் வாய்ப்புள்ளது. இரண்டு அணிகளிலும் கோடிக்கணக்கில் பணத்தை செலவழித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் அதற்கு வாய்ப்புள்ள வேட்பாளர்களே தேர்வு செய்யப்படுவார்கள்.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் நெல்லையில் போட்டியிடுவாரா என கேட்டபோது அதை மறுக்கவில்லை. ஏற்கனவே, அவர், தி.மு.க.,சார்பில் போட்டியிட்ட தொகுதி இது. கடைசிநேரத்தில் அவரது கட்சி தி.மு.க.,கூட்டணியில் அங்கம் வகித்து, சரத்குமார் சீட் பெற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அவர் போட்டியிடுவதாக இருந்தால் தேர்தல் களம் இன்னும் சூடுபிடிக்கும்.

எம்.ஜி.ஆர்.,காலத்தில் வானளாவிய அதிகாரம் படைத்த தொகுதியாக இருந்த சேரன்மகாதேவி தொகுதி தற்போது மறுசீரமைப்பில் நீக்கப்பட்டுள்ளது. தற்போது சேரன்மகாதேவி எம்.எல்.ஏ.,வாக காங்கிரசின் வேல்துரை உள்ளார்.

நெல்லை தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ.,க்கள்

நெல்லை- மாலைராஜா (தி.மு.க.,)

பாளையங்கோட்டை- மைதீன்கான் (தி.மு.க.,)

நாங்குநேரி- வசந்தகுமார் (காங்கிரஸ்)

ராதாபுரம்- அப்பாவு (தி.மு.க.,)

அம்பாசமுத்திரம்- ஆவுடையப்பன் (தி.மு.க.,)

ஆலங்குளம்- பூங்கோதை (தி.மு.க.,)

நெல்லை தொகுதியில்தான் நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம், கங்கைகொண்டான் தொழிற்பூங்கா என நிலுவையில் உள்ள திட்டப்பகுதிகள் உள்ளன. 369 கோடி ரூபாயில் அரசு அறிவித்துள்ள வெள்ளநீர் கால்வாய் திட்டமும் இந்த தொகுதிக்குள்தான் வருகிறது. இருப்பினும் கடந்த ஐந்து ஆண்டுகளில் காங்.,எம்.பி.,மூலம் குறிப்பிடும்படியான திட்டங்கள் எதுவும் செயல்படுத்தாததும் தேர்தலில் எதிரொலிக்கலாம்

நன்றி : தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin