சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்ட மகளிர் சிறப்பு ரயில்களை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று தாம்பரத்தில் நடந்த நிகழ்ச்சியில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
ரயில்வே பட்ஜெட்டில் சென்னையில் அனைத்து மகளிர் சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி சென்னை தாம்பரம் - கடற்கரை, அரக்கோணம் - கடற்கரை, கடற்கரை - வேளச்சேரி ஆகிய மார்க்கங்களில் 3 மகளிர் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. நேற்று முதல் இவை ஓடத் தொடங்குகின்றன.
இந்த ரயில்கள் தொடக்க விழா நேற்று சென்னையில் நடந்தது.
தாம்பரம் ரயில் சந்திப்பில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், சிறப்பு ரயிலை பச்சைக் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மத்திய அமைச்சர்கள் தயாநிதி மாறன், இ.அகமது, முனியப்பா, ஜெகத்ரட்சகன், தமிழக போக்குவரத்து அமைச்சர் கே.என். நேரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ரயில்கள் ஓடும் நேரம்...
தாம்பரம் - கடற்கரை சிறப்பு மகளிர் ரயில் தினசரி காலை 8.37 மணிக்கு தாம்பரத்திலிருந்து கிளண்பி 9.32 மணிக்கு கடற்கரை சந்திப்பை வந்தடையும்.
மறு மார்க்கத்தில் கடற்கரையிலிருந்து மாலை 5.57 மணிக்குப் புறப்பட்டு மாலை 6.52க்கு தாம்பரத்தை வந்தடையும்.
அரக்கோணம் - கடற்கரை ரயில், அரக்கோணத்தில் காலை 7 மணிக்குப் புறப்படும். 8.55க்கு கடற்கரையை வந்தடையும். மறு மார்க்கத்தில் கடற்கரையிலிருந்து மாலை 5.50 மணிக்குப் புறப்பட்டு 8.05 மணிக்கு அரக்கோணத்தை சென்றடையும்.
வேளச்சேரி - கடற்கரை ரயில் காலை 9 மணிக்கு வேளச்சேரியில் கிளம்பி 9.40 மணிக்கு கடற்கரையை அடையும். மறு மார்க்கத்தில் மாலை 5.05 மணிக்கு கடற்கரையிலிருந்து கிளம்பி 5.45 மணி்க்கு வேளச்சேரி சென்று சேரும்.
3 ரயில்களிலும் தலா 9 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். லேடீஸ் ரயில் என்று தெரியாமல் (அல்லது தெரிந்தே) ஆண்கள் யாரும் ஏறி விடாமல் இருப்பதற்காக, முதல் ஐந்து நாட்களுக்கு மட்டும் ஒவ்வொரு பெட்டியிலும் பெண் போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருப்பார்கள்.
மகளிர் சிறப்பு ரயி்ல்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் ஓடாது. மற்றும் அரசு விடுமுறை நாட்களிலும் இவை ஓடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக