ஸ்ரீவை மக்களை பற்றியும் ஊர் நடப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்,உங்களுடைய கருத்துகளையும் பதிவு செய்யலாம்..
வியாழன், 13 ஆகஸ்ட், 2009
விமானப் பயணிகளுக்கு கட்டாய மருத்துவப் பரிசோதனை அட்டை: மத்திய அரசு உத்தரவு
பன்றிக் காய்ச்சல் பீதி எதிரொலியாக, விமானப் பயணிகளுக்கு மருத்துவப் பரிசோதனை அட்டை கட்டாயம் வழங்க வேண்டும் என்றும், அவ்வாறு வழங்காத விமான நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விமானப் போக்குவரத்துத் துறை இயக்குனரகம் (The Directorate General of Civil Aviation - DGCA) எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகளவில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ள பன்றிக் காய்ச்சல் நோய் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்நோய்க்கு இதுவரை 14 பேர் பலியாகியுள்ளனர். நோயை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன.
அதன்படி, இந்தியாவில் இருந்து வெளிநாடு செல்லும் அல்லது வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் விமானப் பயணிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு பரிசோதனை செய்யப்பட்ட பயணிகளுக்கு, பரிசோதனை செய்துகொண்டதற்கான 'மருத்துவப் பரிசோதனை அட்டை' (Health Screening Card) வழங்க வேண்டும் என்றும் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் விமானப் போக்குவரத்து துறை இயக்குனரகம் (DGCA) அறிவுறுத்தியிருந்தது.
இதுதொடர்பாக, கடந்த ஏப்ரல் மாதமே அனைத்து விமான நிறுவனங்களுக்கும் DGCA கடிதம் எழுதியிருந்தது. மே மற்றும் ஜூன் மாதங்களிலும் நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டன. எனினும், பெரும்பாலான விமான நிறுவனங்கள் விமானப் பயணிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ததற்கான அட்டை வழங்குவதில்லை என்று தெரியவந்தது.
எனவே, இதுதொடர்பாக விமான நிறுவனங்களுக்கு DGCA மீண்டும் அறிவுறுத்தியுள்ளது. இனிமேலும், விமானப் பயணிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ததற்கான அட்டை வழங்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுவரை, விமானப் பயணிகளுக்கு மருத்துவப் பரிசோதனை அட்டை வழங்கப்பட்டது குறித்த விபரங்களை அறிக்கையாக சமர்பிக்கும்படியும் இந்தியாவில் விமானங்களை இயக்கும் அனைத்து விமான நிறுவனங்களுக்கும், DGCA உத்தரவிட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக