சீனாவில் சுமார் 10,000 உய்குர் இன இஸ்லாமியர்களைக் காணவில்லை என்றும், அவர்களை சீன அரசு கொன்றிருக்கலாம் என்றும் உய்குர் இன தலைவர் ரெபியா கதீர் பரபரப்பான குற்றச்சாற்றைக் கூறியுள்ளார்.
சீனாவின் சிஞ்சியான் மாகாணத்தில் உய்குர் என்ற இஸ்லாமிய பிரிவினர் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கும், பெரும்பான்மை இன சீனர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்த நிலையில், இந்த மாதம் துவக்கத்தில் அங்கு வெடித்த கலவரத்தில் 150 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
இருப்பினும், அங்கு தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ள நிலையில், உய்குர் பிரிவினைவாத குழுக்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும் என்று சீன அரசு நேற்று எச்சரித்திருந்தது.
இந்நிலையில் சீனாவிலிருந்து வெளியேற்றப்பட்டு, அமெரிக்காவிலிருந்து செயல்படும் உலக உய்குர் சபையின் தலைவரான ரெபியா கதீர், ஐந்து நாள் பயணமாக ஜப்பான் வந்துள்ளார்.
அங்கு அவர் ஜப்பான் ஆளும் கட்சியின் முக்கிய தலைவர்களை சந்தித்து,உய்குர் இன இஸ்லாமியர்களுக்கு ஆதரவு திரட்ட உள்ளதாக செய்திகள் வெளியாயின.
இந்நிலையில் , இன்று டோக்கியோவில் பத்திரிகையாளர்களை சந்தித்த ரெபியா கதீர், இந்த மாதம் தொடக்கத்தில் சிஞ்சியான் மாகாணத்தில் கலவரம் நடந்தபோது, ஜூலை 5 ஆம் தேதியன்று ஒரே நாள் இரவில் சுமார் 10,000 க்கும் அதிமான உய்குர் இன இஸ்லாமியர்கள் காணாமல் போய்விட்டதாக கூறினார்.
அன்றைய தினம் இரவில் மின்தடையை ஏற்படுத்திய சீன அரசு, இருட்டில் உய்குர் இனத்தவர்களை சரமாரியாக சுட்டுக்கொன்றதாகவும், அடுத்த நாள் காலை மக்கள் விழித்து பார்த்தபோது ஏராளமான உய்குர் இன ஆண்கள் காணாமல் போய்விட்டதை அறிந்த்து கொண்டதாகவும் ரெபியா கதீர் தெரிவித்தார்.
உய்குர் இன மக்களை அழிக்க சீன அரசு முயற்சிப்பதாகவும், இதனை உலக நாடுகள் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதனிடையே ரேபியா கதீரை ஜப்பானுக்குள் அனுமதிக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தும், ஜப்பான் அரசு அதனை பொருட்படுத்தாமல் அவரது பயணத்திற்கு அனுமதி அளித்துள்ளது குறித்து சீனா அயலுறவுத் துறை அமைச்சகம கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
ஆனால் ரெபியா கதீரை ஜப்பான் அரசு அழைக்கவில்லை என்றும், சில மக்கள் குழுக்கள்தான் அவரை அழைத்துள்ளதாகவும் ஜப்பான் அரசு பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதன் காரணமாக ஜப்பான் - சீனா இடையேயான உறவில் பாதிப்பு எதுவும் ஏற்படாது என்றும் அவர் மேலும் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக