செவ்வாய், 31 மே, 2011

ஸ்ரீவை, அணையில் தேங்கி நிற்கும் அமலைச்செடிகள்


புதிதாக பதவி ஏற்றுள்ள அரசு ஸ்ரீவைகுண்டம் அணையில் தேங்கியுள்ள அமலைச் செடிகளை அகற்றி தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாமிரபரணி ஆறு கிட்டத்தட்ட பாபநாசத்தில் இருந்து புன்னக்காயல் வரை 75 கிலோ மீட்டர் தூரம் தினசரி குடிதண்ணீர், விவசாயம், தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் கொடுத்து வருகிறது.

கோடைகாலமாக இருப்பதால் ஸ்ரீவைகுண்டம் அணையில் 40 அடிக்கு கீழ் தண்ணீர் இறங்கி கொண்டு வருகிறது. இதனால் தற்போது தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பாபநாசத்திலிருந்து புன்னக்காயல் வரை அமலைச் செடிகள், வேலிக்காத்தான் செடிகள் ஆறுகள், குளங்கள், மடைகள், சிற்றாறுகள் என அனைத்திலும் தண்ணீர் தெரியாதவாறு ஆக்கிரமித்து வளர்ந்துள்ளது.

ஒரு அமலைச்செடி நாள் ஒன்றுக்கு அரைலிட்டர் தண்ணீரை உறிஞ்சுவதாக தெரிகிறது. மேலும் அமலையின் வேர்கள் அழுகி தண்ணீரை அசுத்தமும் செய்து வருகிறது. அடர்த்தியாக அமலைகள் இருப்பதால் பாம்புகள், அட்டைகள், கண்ணுக்கு தெரியாத புழுக்கள் எல்லாம் தண்ணீரை அசுத்தப்படுத்தி வருகிறது. பெருநகரங்களில் உள்ள கழிவுகள் எல்லாம் சேர்ந்து தாமிரபரணி ஆற்றை பாழ்படுத்தி வருகிறது.

ஸ்ரீவைகுண்டத்தில் மக்கள் பயன்படுத்தி வரும் குடிதண்ணீர் பாதுகாக்கப்படாத ஆற்றிலிருந்து நேரடியாக மக்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. முதல்நாள் பிடித்த குடிதண்ணீர் குடத்தில் மறுநாள் பார்த்தால் குடத்தின் உள்ளே பசை போல் கழிவுகள் ஒட்டுகிறது. மறுநாள் குடங்களை நன்றாக கழுவிய பின்னர் தான் தண்ணீர் பிடிக்க முடிகிறது. சுகாதாரமான தண்ணீர் கிடைக்காததால் பொதுமக்களுக்கு தோல் நோய்கள் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட்டு வருகிறது.

ஸ்ரீவைகுண்டம் அணையில் உள்ள தண்ணீரை சுத்தப்படுத்தி, ஆழப்படுத்தி, அமலைச் செடியை அப்புறப்படுத்த வேண்டுமென பொதுப்பணித்துறையிடம் கடந்தாண்டு டிசம்பரில் மனு கொடுக்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த பொதுப்பணித்துறை அமலைச் செடிகளை அப்புறப்படுத்த திட்டமில்லை என்றும், அணையை ஆழப்படுத்த வனத்துறையின் அனுமதி வேண்டும் என்றும் தெரிவித்துவிட்டனர்.

ஸ்ரீவைகுண்டம் அணையை ஆழப்படுத்த அரசுத்துறையான வனத்துறை பொதுப்பணித்துறைக்கு எப்போது அனுமதி அளிக்கும் என்பது நீண்ட நாள் கேள்வியாக உள்ளது.

ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வாருவது சம்பந்தமாக பொதுப்பணித்துறையும், வனத்துறையும் இணைந்து அதிகாரிகளை வைத்து ஆய்வு செய்து தூர்வாருவதற்கு வழிவகை செய்ய தமிழகத்தில் புதிதாக பதவி ஏற்றுள்ள அரசு செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

ஸ்ரீவைகுண்டம் தொகுதியின் எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பதவியை பெற்றுள்ள சண்முகநாதன் இதனை உடனே நிறைவேற்றுவார் என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய சிபிஎம்., செயலாளர் கந்தசாமி கலெக்டருக்கு கோரிக்கை மனு ஒன்றினையும் அனுப்பி உள்ளார்.

தகவல் : தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin