வியாழன், 10 ஜூன், 2010

ஸ்ரீவை K G S பள்ளியில் சாதனை படைத்தும் சாதி சான்றிதழ் கிடைக்காததால் இன்ஜி., கல்லூரியில் சேரமுடியாமல் தவிக்கும் மாணவன்

ஸ்ரீவைகுண்டம், : ஸ்ரீவைகுண்டத்தில் சாதி சான்றிதழ் கிடைக்காததால் இன்ஜி., கல்லூரியில் சேரமுடியாமல் தவிக்கும் மாணவருக்கு அரசு உடனே சாதி சான்றிதழ் வழங்கிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று எட்டயபுரத்து முண்டாசு கவிஞன் பாடிவிட்டு போய்விட்டார். ஆனால் இன்று பள்ளியில் சேரும் காலம் முதல் உயர்கல்வி, வேலை வாய்ப்பு என்றதோடு மட்டுமல்லாமல், மறைமுகமாக அரசியல் கட்சிகளில், தேர்தல் நேரத்தில், டிக்கெட் வழங்குவது முதல் மந்திரி சபை அமைவது வரை அனைத்து விபரங்களும் ஜாதியின் அடிப்படையில் தான் நடந்தேறி வருகிறது.


10ம் வகுப்பிலும், 12ம் வகுப்பிலும் தொடர்ந்து பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்த ஏழை மாணவரின் நிலையோ சாதி சான்றிதழ் இல்லாமல் துடுப்பில்லாத படகுபோல் தத்தளித்து கொண்டு இருக்கிறது.

ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ குமரகுருபரர் சுவாமிகள் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்த மாணவர் கணேசன் மிகவும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர். இவரது தந்தை பேச்சிமுத்து, தாயார் பார்வதி ஆகியோரும் திருவிழாவில் பலூன் விற்கும் தொழில் செய்து வருகின்றனர். இவர்களின் வருமானம் சராசரி குடும்ப வருமானத்தைவிட மிகக்குறைவு. குடிசை வீட்டில் மின்சாரமே இன்று வரை இல்லை.ஆனாலும் 10ம் வகுப்பு தேர்வில் 463 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியிலே முதலிடமும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 1028 மார்க்குகள் எடுத்து பள்ளியில் முதல் மாணவனாக மீண்டும் சாதனை படைத்துள்ளார். தெருவிளக்கில் படித்து சாதனை படைத்த கணேசனுக்கு அரசோ இது வரை சாதி சான்றிதழ் வழங்கவில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயமாகும்.

காட்டுநாயக்கர் சமுதாயத் தைச் சேர்ந்த இவருக்கு சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தால் அரசோ இந்த சமுதாயம் செங்கோட்டை, குற்றாலம், பாபநாசம் போன்ற பகுதியில் வசிக்கின்றனர். அதனால் உங்களுக்கு இங்கு வழங்க முடியாது என கூறிவிட்டனர்.மேற்கண்ட பழைய ரெக்கார்டுகள் அனைத்தும் 1900ம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உள்ளவை. அதை வைத்துக் கொண்டு சுதந்திர இந்தியாவில் வசிக்கும் ஒருவருக்கு ரேஷன் கார்டு வழங்கிய பிறகும், இந்த முகவரியில் உள்ள ஒருவருக்கு அவரது சொந்த சாதியை குறிப்பிடும் சாதி சான்றிதழ் வழங்காததால் அந்த ஏழை மாணவரின் இன்ஜினி யரிங் படிப்பு நூல் அறுந்த பட்டம் போல் வானில் தத்தளிக்கிறது.

அனைத்து வசதிகள் இருந்து சாதிக்கும் நகர்புற மாணவர்களுக்கு இணையாக தெருவிளக்கில் படித்து கூரைவீட்டில் தங்கி படித்து சாதனை படைத்து பேர்வாங்கிய மாணவர் கணேசனுக்கு அரசு போர்கால நடவடிக்கை எடுத்து அவருக்கு சாதி சான்றிதழ் வழங்கி அவரின் வாழ்வில் ஒளி ஏற்றிட வேண்டும். மேலும் அவரின் படிப்பு செலவிற் கு அரசு உதவிட வேண்டும் என பொதுமக்கள் கோ ரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி : தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin