வியாழன், 10 ஜூன், 2010

"ஜாக்கி'கள் மூலம் வீட்டை அப்படியே தூக்கி உயர்த்தி கட்டும் அதிசய தொழில்நுட்பம்


சென்னை:மழைக்காலத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் 60 டன் எடை கொண்ட ஒரு அடுக்குமாடி வீட்டை பெயர்த்து, 260 "ஜாக்கி'கள் மூலம் அப்படியே தூக்கி, நான்கு அடி உயர்த்தும் புதிய கட்டட தொழில்நுட்ப பணிகள், தமிழகத்தில் முதல் முறையாக வேளச்சேரியில் நடந்து வருகிறது.


மழைக்காலம் என்றால் வேளச்சேரி, வெள்ளக் காடாகிவிடும். குடியிருப்பு பகுதிகளில் இடுப்பளவு மழைநீர் தேங்கும். படகுகள் மூலம் தான் பயணிக்க முடியும். இப்பிரச்னை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அப்பகுதியை சேர்ந்த ராமன் என்ற ஆடிட்டர் ஒருவர், நவீன தொழில்நுட்பம் மூலம் தனது வீட்டை பெயர்த்து, வாகனங்களுக்கு பயன்படுத்தும் "ஜாக்கி'கள் மூலம் நான்கு அடி உயரம் தூக்கி, கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
ராமன் மனைவி லட்சுமி கூறியதாவது: நாங்கள் வேளச்சேரி, பேபி நகர், பட்டுக்கோட்டை முத்துக்குமாரசாமி சாலையில் 2001ம் ஆண்டு இடத்துடன் புதியதாக கட்டப்பட்ட வீட்டை வாங்கினோம். கீழ் தளம், மேல் தளம் 2,600 சதுர அடியில் கட்டப்பட்டது. குடிவந்த சில மாதங்களில் மழைக்காலம் துவங்கியது. அப்போது, வேளச்சேரி பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை கண்டு அதிர்ச்சியடைந்தோம். எங்கள் வீட்டிற்குள் இடுப்பளவு தண்ணீர் புகுந்தது. ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் எங்களுக்கு இதே நிலைதான். விமோசனம் கேட்டு மாநகராட்சியை அனுகினோம். பலரிடம் ஆலோசனை கேட்டோம். அப்போது, முகப்பு பகுதியில் தடுப்பு கட்டுங்கள்; வீட்டின் தரைத்தளத்தை உயர்த்துங்கள்; கீழ்தளத்தில் உள்ள அறைகளை அகற்றிவிட்டு கார் "பார்க்கிங்' ஆக்கிவிடுங்கள் என தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர்.


வீடு கட்டும் கான்ட்ராக்டர் ஒருவரிடம் ஆலோசனை கேட்டபோது,"உங்கள் வீட்டை இடித்துவிட்டு அடுக்குமாடி வீடுகள் கட்டி விடலாம். அதில், எனக்கு 60 சதவீதமும்; உங்களுக்கு 40 சதவீதம்' என பங்குபோட ஆரம்பித்தார். இதனால், நாங்கள் குழம்பிப் போனோம். இறுதியில், என் கணவர் டில்லியில் உள்ள தனது நண்பர் ஒருவரிடம் ஆலோசனை கேட்டார். அப்போது, வீட்டை இடிக்காமல் பெயர்த்து, வாகனங்களுக்கு டயர் மாற்றப் பயன்படுத்தும் "ஜாக்கி'களை பயன்படுத்தி தேவையான உயரத்திற்கு மாற்றியமைக்கும் தொழில்நுட்பம் குறித்து கூறினார். அவ்வாறு உயரமாக்கப்பட்ட, கட்டப்படும் சில வீடுகளையும் நேரில் கண்டு அதிசயித்தோம். தற்போது, எங்கள் வீட்டையும் அதே தொழில்நுட்பம் மூலம் பெயர்த்து நான்கு அடிக்கு உயர்த்தி வருகிறோம். இவ்வாறு லட்சுமி கூறினார்.


இந்த புதிய தொழில்நுட்பத்தை செயல்படுத்தி வரும் அரியானாவை சேர்ந்த அர்கேஷ் குமார் சவுகான் கூறுகையில்,""ஜாக்கி'கள் மூலம் பழைய வீடுகளை தரைமட்டத்தில் இருந்து பெயர்த்து,தேவையான அளவு உயர்த்தும் கட்டட தொழில்நுட்ப முறையை நாங்கள் கடந்த 1991ம் ஆண்டு முதல் செய்து வருகிறோம். முதன் முதலில் அரியானா பகுதியில் இருந்த பாலத்தை பெயர்த்து உயர்த்தினோம். அதன் பிறகு பல மாநிலங்களில் நூற்றுக்கணக்கான வீடுகளை இடிக்காமல், பெயர்த்து தேவையான உயரத்திற்கு உயர்த்திக் கொடுத்து வருகிறோம். தமிழகத்தில் முதல் முறையாக ராமனின் வீட்டை எங்கள் தொழில்நுட்பத்தில் உயர்த்தி வருகிறோம். கடந்த மாதம் 16ம் தேதி பணிகளை துவக்கினோம். இன்னும் சில நாட்களில் பணிகள் முடிந்து விடும். இந்த தொழில்நுட்ப முறையை நாங்கள் அரசிடம் முறைப்படி பதிவு செய்துள்ளோம். பல முறை லிம்கா சாதனை புத்தகத்தில் எங்கள் தொழில்நுட்பம் இடம் பெற்றுள்ளது. கின்னஸ் புத்தகத்திலும் பதிவு செய்துள்ளோம்' என்றார்.


வீட்டை தூக்கும் நவீன தொழில்நுட்ப முறை: வேளச்சேரியில் உள்ள ராமன் வீட்டில் 16 பேர் கொண்ட குழுவினர் பணி புரிந்து வருகின்றனர். 2,600 சதுர அடி, 60 டன் எடை கொண்ட அவரின் வீட்டை தரை மட்டத்தில் இருந்து நான்கு அடி உயர்த்தி வருகின்றனர். முதலில் சுவர்களின் இருபுறமும் தோண்டி அதன் கீழ் ஒவ்வொரு பக்கமாக "ஜாக்கி'கள் வைக்கின்றனர். அந்த வீட்டிற்கு 260 "ஜாக்கி'கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தேவையான உயரத்திற்கு 16 பேரும் ஒரே நேரத்தில் "ஜாக்கி'களை இயக்கி உயர்த்துகின்றனர். பின், பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட சிமென்ட் செங்கற்களை வைத்து கட்டுகின்றனர். இந்த முறையில் வீட்டின் தரைத்தளம் மட்டும் சேதமடைகிறது. சுவர்களில் விரிசல் கூட விழுவதில்லை. மூன்று அடி வரை உயர்த்துவதற்கு, சதுர அடிக்கு 225 ரூபாய் கூலி மட்டும் வசூலிக்கின்றனர். அதன் பிறகு ஒவ்வொரு சதுர அடிக்கும் ரூ.80, ரூ.100 என வசூலிக்கின்றனர். ஒரு மாதத்திற்குள் வீட்டை உயர்த்தும் பணிகள் முடிக்கப்படுகின்றன.


செய்தி : தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin