துபாய்: சவுதியில் பணிபுரியும் வெளிநாட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு பணி அடிப்படையில் அல்லாமல், பொருளாதார அடிப்படையில் நிரந்தரக் குடியிருப்பு விசா வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
இதனால் சவுதியில் வேலைபார்க்கும் இந்தியர்கள் தங்கள்
குடும்பத்தினரை நிரந்தரமாக தங்களுடனேயே தங்க வைத்துக் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கு முன்பு ஒயிட் காலர் ஜாப் என கருதப்படும், என்ஜினியர், டாக்டர் மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே தங்களது மனைவி, குடும்பத்தினரை உடன் தங்க வைத்துக் கொள்ள அனுமதிக்கும் நிரந்தரக் குடியிருப்பு விசா தரப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது பணியை அடிப்படையாகக் கொள்ளாமல் பொருளாதார நிலையைப் பார்த்து விசா வழங்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் சவுதியில் பணியாற்றும் வெளிநாட்டினர், குறிப்பாக இந்தியர்கள் தங்களது மனைவி, குடும்பத்தினரை தங்களுடன் வைத்துக் கொள்ள வழி ஏற்பட்டுள்ளது. இதனால் தாயகத்தில் குடும்பத்தை குறிப்பாக மனைவிகளை தவிக்க விடும் அவலம் முடிவுக்கு வருகிறது.
இந்த அறிவிப்பை அடுத்து, ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்திலும், ஜெட்டா துணை தூதரகத்திலும் ஏராளமான இந்தியர்கள் தங்கள் மனைவி பெயரை சேர்க்க ஆவலுடன் விண்ணப்பங்களை தரத் துவங்கியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக