
சென்னையில் புகையை அதிகளவில் வெளியிடும் வாகனங்களை ஓட்டினால் நாளை (18ம் தேதி) முதல் ரூ.50 அபராதம் வசூலிக்க போக்குவரத்து போலீசார் முடிவு செய்துள்ளனர்.
தற்போது வாகன பெருக்கம் அதிகரித்து வரும் சூழலில், அதில் இருந்து வரும் புகையினாலும் அதிக அளவில் மாசு ஏற்படுவது தெரிய வந்துள்ளதால், அதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து, மாசு ஏற்படுத்தும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க, சென்னை போலீசாருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால், இப்போது புதிதாக 16 பொலைரோ கார்கள் வாங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு காரும் ரூ.9 லட்சம் மதிப்புடையவை. ஒவ்வொரு காரிலும் புகையை கண்டறியும் இயந்திரம், கம்ப்யூட்டர், யு.பி.எஸ்., வெப்கேமரா ஆகியவை ரூ.2 லட்சம் செலவில் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் 8 கார்கள் பெட்ரோல் வாகனத்தையும், 8 கார்கள் டீசல் வாகனத்தையும் கண்டறியும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. நாளை (18ம் தேதி) முதல் நகர் முழுவதும் இந்த கார்களை முக்கியமான சாலை ஓரமாக நிறுத்தி, வாகனங்களை சோதனையிட சென்னை போக்குவரத்து போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
புகையை அதிக அளவில் வெளியிடும் வாகனம் ஓட்டினால் ரூ.50 அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த புதிய வாகனங்கள் மூலம் சோதனை நடத்துவதால், பெருமளவில் வாயுவை வெளியிடும் வாகனங்களை கட்டுப்படுத்த முடியும் என்று போலீசார் கருதுகின்றனர். மேலும், புகை சோதனை நடத்தும் கம்ப்யூட்டரே அபராதத்துக்கான பில்லை கொடுக்கும்.
நாளை முதல் சோதனை நடத்த உத்தரவிடப்படும். நகர் முழுவதும் முக்கியமான சாலைகளில் இந்த கார்களை நிறுத்த சோதனை நடத்தப்படும் என்று போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக