சனி, 12 டிசம்பர், 2009

இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் வைகோ- கனிமொழி நேருக்குநேர் சந்திப்பால் திடீர் பரபரப்பு!திருச்செந்தூர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், கனிமொழி எம்.பியும் நேருக்குநேர் சந்தித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் வருகிற 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி அதிமுக வேட்பாளர் அம்மன் நாராயணனை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வை.கோ கிராமம் கிராமமாக சென்று தேர்தல் பிரச்சாரம் செய்துவருகிறார்.

இதுபோல் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனை ஆதரித்து கனிமொழி எம்.பி. தேர்தல் பிரச்சாரம் செய்துவருகிறார். தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் அதிமுக – திமுகவினர் எந்த நேரத்திலும் மோதும் சூழ்நிலை உருவாகும் நிலை ஏற்பட்டுவருவதால் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் எஸ்.பி. செந்தில்குமார் தலைமையில் போலீசார் கிராமம் கிராமமாக 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ, அதிமுக வேட்பாளர் அம்மன் நாராயணனை ஆதரித்து திருச்செந்தூர், மணப்பாடு பிரச்சாரம் செய்துவிட்டு பரமன்குறிச்சிக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய வேனில் வந்துகொண்டிருந்தார். அப்போது திமுக வேட்பாளரை ஆதரித்து கனிமொழி எம்.பி. பரமன்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரம் செய்துகொண்டிருந்தார்.

இதை தொடர்ந்து அதிமுக – திமுகவினர் மோதுவதை தடுக்க பரமன்குறிச்சிக்கு வந்துகொண்டிருந்த வைகோவிடம் போலீசார் மாநாடு கிராமத்தில் அவரது வேனை நிறுத்தி கனிமொழி எம்.பி பிரச்சாரம் செய்துகொண்டிருப்பதால் தாங்கள் 10 நிமிடம் நின்று செல்லுமாறு கேட்டுக்கொண்டனர். இதற்கு ஒத்துழைப்பு கொடுத்த வை.கோ காட்டுப்பகுதியில் நிறுத்தி வேனுக்குள் அமர்ந்திருந்தார்.

வைகோ வேனை போலீசார் நிறுத்தியதை கண்டித்து மதிமுகவினர் கொந்தளித்து அதிமுகவினருக்கு தகவல் தெரிவித்தனர். இதைதொடர்ந்து அதிமுகவினர் சுமார் 20க்கும் மேற்பட்ட கார்களில் மாநாடு கிராமத்திற்கு விரைந்து வந்து வைகோ வேனை தங்களது பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவந்து வைகோவுக்கு பாதுகாப்பாக நின்று கொண்டனர்.

இதற்கிடையில் பரமன்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு கனிமொழி எம்.பி மாநாடு கிராமம் வழியாக திருச்செந்தூர் சென்றார். அப்பொழுது வை.கோ.வும் கனிமொழி எம்.பியும் நேருக்குநேர் சந்திக்கும் சூழ்நிலை உருவானதால் அங்கு பதட்டம், பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் கனிமொழி எம்.பி வைகோ வேன் அருகே வந்ததும் இரு கை கூப்பி வை.கோ.வுக்கு வணக்கம் தெரிவித்தார். பதிலுக்கு வைகோவும் இரு கைகூப்பி வணக்கம் தெரிவித்தார். இருவரும் சிறு புன்னகையை சிந்திவிட்டு தேர்தல் பிரச்சாரத்திற்கு புறப்பட்டனர். வைகோவும், கனிமொழி எம்.பி.யும் நேருக்குநேர் சந்தித்து கொண்டதால் தேர்தல் களம் பரபரப்பாக காணப்பட்டது.

அதன்பின் பரமன்குறிச்சியில் நடந்த தேர்தல் பிரச்சாரக்குழுவில் வைகோ பேசும்போது, திமுகவினர் எது நடக்கும் என்று எதிர்பார்த்தார்களோ அது நடக்கவில்லை. தேர்தல் களம் என்பது அமைதியாக நடைபெற வேண்டியது. வன்முறைக்கு இடமில்லை. அதிமுக வேட்பாளர் வெற்றி உறுதியாகி விட்டது. இவ்வாறு வைகோ தெரிவித்தார்.

நன்றி :திரு. சக்திமுருகன், தூத்துக்குடி வெப்சைட்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin