குவைத் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 236 இந்தியர்களை இந்தியாவிடம் ஒப்படைப்பது தொடர்பாக அந்த நாட்டுடன் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது. எண்ணெய் வளமிக்க அரபு நாடான குவைத்தில் 6 லட்சம் இந்தியர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் அங்குள்ள பல்வேறு நிறுவனங்களில் தற்காலிகமாக வேலை செய்து வருகின்றனர். பலர் நிரந்தரமாக அங்கேயே தங்கியுள்ளனர். அந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையே 35 லட்சம்தான்.
குவைத் நாட்டு சிறைகளில் பல்வேறு குற்றங்களுக்காக 236 இந்தியர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களை இந்தியாவிடம் ஒப்படைப்பது தொடர்பான ஒப்பந்தத்தை குவைத் நாட்டுடன் இந்தியா செய்ய உள்ளது. இருதரப்பும் நடத்திய பேச்சுவார்த்தைகளின் மூலம் இந்த ஒப்பந்தத்துக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் இது கையெழுத்தாகும் என்று எதிர்பார்ப்பதாக இந்த நாட்டுக்கான இந்திய தூதர் அஜய் மல்கோத்ரா டெல்லியில் நேற்று தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ‘‘இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால் குவைத் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இந்தியர்கள் அனைவரும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார்கள். இருப்பினும், அங்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை இந்திய சிறைகளில் அவர்கள் அனுபவிக்க வேண்டும். குவைத் மத்திய சிறையில் 175 இந்தியர்களும், மற்ற சாதாரண சிறைகளில் 61 இந்தியர்களும் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்தியாவுக்கு இவர்கள் அனுப்பப்பட்டால், தங்கள் குடும்பத்தினரை பார்க்க இயலும். குவைத் சட்டங்களால் பாதிக்கப்படும் இந்தியர்களுக்கு உதவ தனி சட்ட உதவி மையம் திறக்கப்பட்டு உள்ளது. உலகளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையால், மற்ற நாடுகளில் உள்ளதை விட குவைத்தில் குறைந்த அளவிலான இந்தியர்களே வேலையை இழந்துள்ளனர்’’ என்றார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக