திங்கள், 14 டிசம்பர், 2009

துபாய்க்கு 10 பில்லியன் டாலர்-அபுதாபி உதவி


பெரும் நிதிச் சிக்கலில் மூழ்கியுள்ள துபாய் வேர்ல்டை காப்பாற்ற, அபுதாபி உதவி நிதியாக 10 பில்லியன் டாலர் நிதியை அறிவித்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் ஒன்று அபுதாபியும், துபாயும். துபாய் தற்போது பெரும் நிதிச் சிக்கலில் மாட்டியுள்ளது. இந்த நிலையில் அபுதாபி, துபாய்க்கு 10 பில்லியன் டாலர் நிதியுதவியை அளித்துள்ளது.

இதில் 4.1 பில்லியன் நிதி, கடன் சிக்கலில் சிக்கித் தவிக்கும் துபாய் அரசின், துபாய் வேர்ல்டுக்கு உடனடியாகத் தரப்படும்.

துபாய் வேர்ல்ட் 26 பில்லியன் கடனில் மூழ்கியுள்ளது. இந்த கடன் சிக்கல் காரணமாக ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகள் ஆட்டம் கண்டன. வர்த்தகங்கள் நடுநடுங்கின என்பது நினைவிருக்கலாம்.

அபுதாபியின் உதவி நிதி குறித்து துபாய் உயர் மட்ட நிதிக் கமிட்டித் தலைவர் தெரிவிக்கையில், அபுதாபி அரசு 10 பில்லியன் டாலர் நிதியுதவியை அளிப்பதாக ஒத்துக் கொண்டுள்ளது.

இதன் மூலம் துபாய் வேர்ல்டின் கடன் சுமை குறைக்கப்படும். முதல் கட்டமாக 4.1 பில்லியன் நிதி துபாய் வேர்ல்டுக்கு அளிக்கப்படும். இன்று இந்த நிதி வந்து சேரும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

இந்த உதவி நிதி அறிவிப்பைத் தொடர்ந்து டாலர், யூரோ ஆகியவற்றின் மதிப்பு லேசான உயர்வைக் கண்டன. அதேபோல ஆசிய பங்குச் சந்தைகளிலும் புள்ளிகள் உயர்வு கண்டன.

ஐக்கிய அரபு எமிரேட்ஸிலேயே மிகப் பெரிய நாடு அபுதாபிதான். மேலும் எமிரேட்ஸின் மிகப் பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடும் அபுதாபி என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin