"இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு விரோதமாக யோகா பயிற்சிகள் இல்லை' என்று இஸ்லாமிய மாநாட்டில் தெளிவுபடுத்தியுள்ளனர், இஸ்லாமிய மதகுருக்கள். சமீபத்தில், உ.பி., மாநிலம், தியோபந்த் என்ற இடத்தில் ஜாமியத்-இ- உலேமா ஹிந்த் என்ற இஸ்லாமிய அமைப்பின் சார்பில் மாநாடு நடந்தது. உள்துறை அமைச்சர் சிதம்பரம், பிரபல யோகா குரு ராம்தேவ் பாபா உள்ளிட்ட பலர் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.
இதில் யோகா குரு ராம்தேவ் கூறியதாவது: முதல் சுதந்திரப் போரிலிருந்து இந்த நாட்டின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் இஸ்லாமியர்களின் பங்கு குறிப்பிடத்தக்கதாக இருந்து வருகிறது. பகதூர் ஷா ஜாபர், பேகம் ஹஜ்ரத் மகல், அஷ் பாக் உல்லா கான் இவர்கள் தொடங்கி அப்துல் கலாம் வரை இதற்கு உதாரணம் சொல்லலாம்.இந்துக்களும், முஸ்லிம் களும் ஒற்றுமையாக இருந்தால்தான் நாட்டின் முன்னேற்றம் உறுதியாக இருக்கும்.இவ்வாறு ராம்தேவ் கூறினார்.தொடர்ந்து, மேடையிலேயே, பிராணாயாமம் குறித்த செயல்முறை விளக்கமும் அளித்தார்.
அதை மாநாட்டில் கலந்து கொண்ட உலாமாக்கள் கூர்ந்து கவனித்தனர். ராம்தேவின் பிராணாயாம விளக்கம், இந்த முறை வித்தியாசமாக சிறப்பாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஜாமியத் அமைப்பின் பொதுச் செயலர் மவுலானா முகமது மத்னி கூறுகையில், "யோகா என்பது ஒரு வகை உடற்பயிற்சி. யோகா, இஸ்லாமிய சட்டங்களின் அடிப்படையில் பார்த்தால் நமக்கு விரோதமில்லாத பயிற்சிதான்' என்று தெளிவுபடுத்தினார்.மாநாட்டில், "ஜிகாத்' என்ற சொல்லை மத அடிப்படையில் தவறாக திரிவுபடுத்தி பயன் படுத்தப்படுவது குறித்து கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக