புதன், 11 நவம்பர், 2009

இந்தியாவிலேயே முதல் முறையாக அறிமுகம்: புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ்

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் புதிய திட்டம் அடுத்த கல்வி ஆண்டில் (2010-11) முதல் நடைமுறைப்படுத்தப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் மதிப்பெண் பட்டியலில் மோசடி, ஆள் மாறாட்டம் செய்ய முடியாது. முறைகேடு நடப்பதை தடுப்பதற்காக இந்த முறை கொண்டு வரப்படுகிறது.

இந்தத் திட்டத்தை இஎஸ்எல்சி மதிப்பெண் பட்டியலில் பரீட்சார்த்த முறையில் கொண்டு வந்தோம். அது வெற்றி பெற்றுள்ளது. எனவே எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல்களிலும் இதே முறையை பின்பற்ற திட்டமிட்டுள்ளோம்.

மாணவர்களின் புகைப்படத்துடன் மதிப்பெண் பட்டியல் வழங்கினால் அதை நகல் எடுத்து அனுப்பும்போகு கெசடட் அதிகாரியின் கையெழுத்தும் தேவையில்லாமல் போகும். மார்க் பட்டியலில் ஏற்கனவே கண்ணுக்கு தெரியாத சங்கேத குறியீடுகள் உள்ளன. இதையும் மீறி மோசடி நடப்பதை தடுக்கவே இந்தத் திட்டத்தை கொண்டு வருகிறோம்.

இதை இந்தக் கல்வி ஆண்டில் கொண்டு வருவது சிரமம். எனவே அடுத்த கல்வி ஆண்டில் நடைமுறைப்படுத்த தீவிரமாக ஆராய்ந்து அறிக்கை தருமாறு தேர்வுத்துறை இயக்குனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே மாணவர்களின் ஹால் டிக்கெட்டில் புகைப்படம் உள்ளது. அதையே பயன்படுத்தி கொள்ளலாமா? என்றும் கேட்டிருக்கிறைம் என்றார். இதுபற்றிய அறிவிப்பு அடுத்த பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாகும் என்று தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin